"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, November 01, 2006

தமிழ் தந்த மருத்துவம்.

என் இனிய வலைப்பதிவாளர்களே!
எதைச் சொன்னால் ரசிப்பார்கள் என்று குழம்பாது எண்ணியவற்றையெலாம் சொல்ல இடம் தந்த blogger அணியினருக்கு நன்றி கூறி இந்த தமிழி முதன்முறையாக மருத்துவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறான்.இது வரை எனக்களித்த ஆதரவை இப்பதிப்பிற்க்கும் அளிப்பீர்கள் என்று துவங்குகிறேன்.
(ஹி ஹி... எல்லாம் நேத்து பார்த்த முதல்மரியாதை படத்தின் பாதிப்பு)

அதாகபட்டது சார்..மனுசனாகப்பட்டவன் சாப்பாட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை அம்மா அப்பா-க்கு கூட கொடுக்கிறதில்ல.நம்ம அம்மிணிகளும் சாப்பாடு என்றால் அது சரவணபவன் கறின்னா அது பொன்னுச்சாமி ஹோட்டல்னு முடிவுக்கு வந்துட்டாங்க சார்.

அதுவும் இந்த I.T.-யில் வேலை செய்யும் மணிகளோ அம்மாவையும் மாமியார்களையும் நம்பியே வாழ்றாங்க சார்.

எல்லாரும் நினைக்கிறமாதிரி மருந்துங்கிறது தனியாயில்ல சார்.அதாகப்பட்டது சரியா அளவா தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் அதுவே அருமருந்துன்னு யாரோ சொல்லியிருக்காங்க சார்.

சே!! லேகியம் விக்கிறவன் மாதிரியே எழுத்து வருதுங்க...மன்னிக்கவும்!

பதார்த்தகுண சிந்தாமணி என்ற ஒரு பழம்பெரும் பொக்கிஷ நூல் எனக்கு கிடைத்தது.அதிலுள்ள நல்லவற்றை உங்களோடோடு பகிர்ந்திட வந்த ஆசையால் இப்பதிவு.

பூமித்தாய் உண்வுக்காய் நமக்களிப்பன நான்கு:
1.மரம்
2.செடி
3.கொடி
4.புல்

மேற்க்கண்டவற்றிலிருந்து நமக்கு கிடைக்கும் பதார்த்தங்கள் எட்டு:
1.வேர்
2.பட்டை
3.கட்டை
4.ரசம்
5.இலை
6.புட்பம்
7.பழம்
8.வித்து

மேற்க்கண்டபதார்த்தங்களின் உதவியால் நாம் அடையும் ருசிகள் ஆறு:
1.கசப்பு
2.உப்பு
3.தித்திப்பு
4.கார்ப்பு
5.புளிப்பு
6.துவர்ப்பு

இப்படியாக எத்தனையோ பொருட்கள் இருந்தாலும் பஞ்சபூதங்களும் மனிதனின் குணத்தையும் உடல்நலனையும் நிர்ணியிக்கிறது.

பஞ்சபூதங்கள்
1.ப்ருதி( மண் அல்லது நிலம்)
2.அப்பு (நீர்)
3.தேயு ( நெருப்பு)
4.வாயு (காற்று)
5.ஆகாயம் (வானம்)

அதில் நமக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலையாயப் பிரச்சனையாய் இன்று இருப்பது அப்பு என்றழைக்கப்படும் நீர். சென்னையில் கடந்த 5 வருடங்களில் மினரல் வாட்டர் என்ற கலாச்சாரம் வேரோடிப்போயிருக்கிறது. மற்றநாடுகளில் எப்படி என்று தெரியவில்லை.அதுவும் இந்த I.T. மக்கள் பெருகிய பின்னர் Hygienic என்ற ஒரு வார்த்தையை வைத்தே சம்பாதித்த ஆலோசனையாளர்களும் மருத்துவரும் மற்றும் வியாபாரிகளும் மிக அதிகம்.
கிராமங்களில் ஊருணி என்றழைக்கப்படும் அனைத்துப்பயன்பாட்டு நீர் சேகரிப்புக்குளங்களை இவர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள்.இதனிடையே நமது நடிகைகளும் மினரல் வாட்டர் நிறைத்த குளங்களில் தான் உடலழகு காட்டுவேன் என்று அடம் பிடிக்கிறார்களாம்.


நீர் என்பது சித்தமருத்துவத்தில் ஒரு தலையாய இடத்தைப் பிடிக்கிறது என்றால் அது மிகையாகாது.

நீர் என்பது,

1. மாரி நீர்
2.ஆலாங்கட்டி நீர்
3.பனிநீர்
4.தண்ணீர்
5.ஆற்று நீர்
6.கங்கை,காவிரி,யமுனை,கோதவரி,துங்கபத்திரா,நருமதா,சிந்து,வைகை,சித்திர,தாம்பிரபரணி,பச்சையாறு போன்ற ஆறுகளின் நீர்
7.தாமரைக்குளம்,அல்லிக்குளம்,அதிகுளிர்ச்சியுள்ள குளம் என்ற குளங்களின் நீர்.
8.ஏரி நீர்
9.ஓடை நீர்
10.கிணற்று நீர்
11.ஊற்று நீர்
12.பாறை நீர்,சுக்கான்பாறை நீர்,கரும்பாறை நீர்
13.அருவி நீர்
14.அடவி நீர்
15.சிவந்த நீர்
16.கறுத்த நீர்
17.வயல் நீர்
18.நண்டுக்குழி நீர்
19.பாசி நீர்
20.சுனை நீர்

அப்பா !! எத்தனை வகைகள் மேற்கூறிய ஓவ்வொன்றிற்க்கும் தனியே மருத்துவ குணங்கள் கூறப்பட்டுள்ளது.இதில் ஏழைகளின் கண்ணீர் நல்ல வேளையில்லை.

ஆனால், நாம் அதாவது சென்னை போன்ற தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பிளாஸ்டிக்டப்பாவில் வைத்துக்குடிக்கும் நீர் என்னவென்று தேடிய போது,
கிடைத்த வெண்பா:

சந்திரா தித்தர்வலி சாராத நீர்புழுதுற்
கந்த மதிசேறு கனப்பிலையு-திர்ந்த நீர்
தங்குசுவை யில்லாநீர் சாற்றுமிவை ஸ்நானப
னங்களுக் காகவுறினே யாம்.

பொருள்:
சந்திரன்,சூரியன் மற்றும் காற்று புகாத மற்றும் அவை அணுக இயலாத இடத்திலிள்ள நீர் மற்றும் கிருமி,துர்வாசனை,ருசியில்லாததுமான நீரானது குளிக்கவோ குடிக்கவோ சமைக்கவோ ஒவ்வாதது.


சரிவிடுங்க நம் தலை எழுத்து இனி சில நீர் மருந்துகளைப் பார்போம்.

நீராகாரம்-
நீராகாரம் என்பது சுமார் 200 மில்லிகிராம் அரிசியை சுத்தம் செய்து பின்பு (பற்ற வைக்கப்பட்ட ) அடுப்பிலசுடு நீரிலிட்டு கொதிக்கவைத்து சிறிது சுவைக்கேற்ப உப்பையிட்டு 20-30 நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டி ஆறவைத்து பின்னர் மீண்டும் அந்த பதார்த்தம் மூழ்கும்வரை நீர் ஊற்றி சுமார் 6-10 மணி நேரம் கழித்து பாத்திரத்திலுள்ள தெளிவாய் உள்ள நீரை (மேலாப்படி) எடுத்தால் கிடைப்பது நீராகாரம்.(என்ன புரிகிறதா நண்பர்களே...!)

இது வாதம் பித்தம் மற்றும் வயிற்றுப்புண் நீக்கவல்லது. நல்ல தாகம் தீர்க்கும் குளிர்பானம் ஆகும்.மேலும் உடல்-முக அழகையும் ததரவல்லது.

உப்பு நீர்:
சிறிது உப்பு சேர்க்கப்பட்ட நீர் சரீரத்தின் வாயுத்தொல்லைகளை நீக்கும்(வாயுத்தொல்லை பற்றிய விபரங்களுக்கு சூரியாவை அணுகவும்).அதிகமாக சாப்பிட்டால் வரும் அஜீரணம் நீங்கும்.குடல்புண்ணிற்கு நல்ல மருந்து. காலையில் வாய் கொப்பளிக்கும் போது சிறிது உப்பிட்ட நீரை பயன்படுத்துங்கள்.

வெந்நீர்:
அளவான சூட்டிலுள்ள வெந்நீரைக்குடித்தால், நெற்றிவலி,புளியேப்பம்,சுரம் போன்றவை குறையும்.
காய்ச்சியாறிய வெந்நீரானது விக்கல்,அதிக வயிற்றுப்போக்கால் வரும் துன்பம்,மயக்கம்,சில்வண்டுக்கடியால் வரு விஷமுறிவு,நெஞ்சுசளி,குன்மம் முதலியவை நீக்கும்.

அதுவும் உணவுக்கு முன் அருந்தினால் பசி மந்தமாகும் எனவே உணவுக்குப்பின் தான் வெந்நீர் அருந்த வேண்டும்.

இளநீர்:

இதில் மட்டும் ஒரு பத்துவகை இருக்கிறது.இதை நாம் பண் பார்த்து பயன்படுத்துவென்பது இயலாது என்பதால், நேரிடையாக சொன்னால்,முறையாக அருந்தும் வெந்நீர் வாதம்,ரத்த அழுத்தம்,பித்தம்,கண்நோய்,சொறி போன்ற சரும நோய்கள் ,உடல் வெப்பம்,மூத்திர சம்பந்தமான நோய்கள் மலப்போக்கு போன்ற வயிற்று உபாதைகளிலிருந்து விடுபடலாம்.

இதில் செவ்விள நீர்- வாதம் ,பித்தம் இளைப்பு போன்றவற்றிற்க்கு அருமருந்தாகும்.

மேலும், காலையில் உணவுக்கு முன் அருந்தினால்: பசி நீங்காது ஆனால் குன்மம் வரும்,
மாலையில் உணவுக்கு முன் அருந்தினால்: எரிகிருமிகள் அழியும்.

உணவுக்கு பின் அருந்தினால்: வாதம் , பித்தம்,கோபம் தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.தேகம் மினுமினுக்கும்.

அதுவும் இளநீரை காய்ச்சியாற்றிக்குடித்தால் இன்னும் சிறப்பு.
இருமல்,வறட்சிசுரம் முதலியன் உடனே நீங்கும்.


நமது முன்னோர் பலரின் கருத்தும் ,கண்டுபிடிப்புகளும் இன்று வெளிநாட்டினர் உரிமம் கொண்டாடிவருகின்றனர் என்பதை நினைத்தாலே வேதனைவருகிறது.

இருக்கட்டும் உண்மை என்பது அழியாதது.

இன்னும் நிறைய வரிசையிலிருக்கிறது நண்பர்களே. உங்களின் ஆதரவு இருந்தால் ..இதனை ஒரு தொடர்பதிவாய் பதியவே விழைகிறேன்.ஆண்டவன் சித்தமிருந்தால் விரைவில் ....நன்றி!

3 comments:

நிகழ்காலத்தில்... said...

நல்ல விசயங்கள், உபயோகமான தகவல்கள், தொடர்ந்து தொடர்பதிவாக இடுகை இடுங்கள்

வாழ்த்துக்கள்

Majid said...

Nice Posting. Please write more in depth and leave humor in between.

Wishing to read more from Dubai.

தமிழி said...

நல் -நன் நீரைப் பற்றிய பதிவை பதித்து மகிழ்ந்த போது ஒரு பதிவர்க்கு நீரால் நேர்ந்ததை பாருங்க!http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html