"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, January 30, 2007

சில பழைய டைரி கவிதைகள்

பல காலம் கடந்து, பல பருவங்கள் கடந்து, பல அனுபவங்கள் பெற்றாலும், பழைய நாட்குறிப்பில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியவைகளைப் பார்க்கும் போது மனசு லேசாகிறது.(படிக்கிறவங்களுக்கு கனமாகிறதோ?? )

ஒரு நினைவூட்டல் தான். என் கிறுக்கல்களிலிருந்து சில உங்கள் பார்வைக்கு...


*உன் பார்வைக்காக தவமிருந்ததால்புதிய கண்ணீரோ!-பூவின் மீது பனித்துளிகள்.

************************************************************************
*காத்திருக்கிறேன்!
என்னை மணம் புரிபவளுக்கல்ல? என் மனம் அறிபவளுக்கு!

காத்திருக்கிறேன்!
என் மார்பளவு உயர்ந்தவளுக்கல்ல? என் மனதைக் கொஞ்சம் நிரப்புவளுக்கு!

காத்திருக்கிறேன்!
வெண்சிவப்பு தோலுக்கல்ல! வெண்ணிற மனதாளுக்கு!

காத்திருக்கிறேன்!
மான் போல் துள்ளுபவளுக்கல்ல! தன்னைப்போல் என்னை நினைப்பவளுக்கு!

காத்திருக்கிறேன்!
கானம் பாடும் வானம்பாடிக்கல்ல! வானம் பார்த்து வசப்படுபவளுக்கு!

***********************************************************************************
* தென்றல் எனக்கே! எனக்கு!! என்று, அசையும் மலர் நினைக்கலாகுமா ?

***********************************************************************************
*கொடியேற்றப்பட்டது சினிமாத்திரையில்,கைதட்டினார்கள் - சுதந்திர தினவிழாவிற்கு கட்டடித்த மாணவர்கள்.

***********************************************************************************
*பல போதனைகள் சோதனையின்றி பிணமாக - புத்தகக் கல்லறையில்.

***********************************************************************************
* மேகத்தை உற்றுப் பார்த்தேன் - கவிஞன் என்றனர்!.
சிற்பத்தை உற்றுப் பார்த்தேன் - ரசிகன் என்றனர்!
சமூகத்தை உற்றுப் பார்த்தேன் - கலைஞன் என்றனர்!
வானத்தை உற்றுப் பார்த்தேன் - சித்தன் என்றனர்!
பெண்ணை உற்றுப் பார்த்தேன் - பித்தன் என்றனரே!?

***********************************************************************************
* இதயத்தில் ஓட்டையாம் மருத்துவர் சொன்னார்- நான் சொன்னேன்!? அது அவள் என்னை விட்டுச்சென்ற சிறப்பு வழி?

***********************************************************************************
* அடிப்பேன் என்று அப்பன் சொன்னதும் என்னை அண்ணன் என்றாயே!
அடியே! அடியின் உதவி அவ்வளவா!!?
தெரிந்திருந்தால் நானும்!!??

***********************************************************************************
*தொலைவிலிருந்து இயக்கும் விஞ்ஞானம் புரியவில்லை!- உன்னைப் பார்க்கும் வரை!!

***********************************************************************************
* நீ தோழியிடம் சொன்னது கேட்டது எனக்கு!!
" அவன் முட்டாள்டீ" - பின்னே! ஏன் உன்னைப் போய்!?

***********************************************************************************
படித்தீர்களா! நன்றி! ---------!

Thursday, January 18, 2007

காதல் தந்த கடவுள்காணும் பொங்கலன்று நான் கண்ட காட்சி ஒன்று. நண்பரோடு ஒரு வணிக வளாகத்தினருகே நின்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, சற்று அருகே பதினாறு/ பதினெட்டு வயதிருக்கத்தக்க ஒரு இளைஞனும், அதே வயதொத்த பெண்ணும் அளாவாளவிக் கொண்டிருந்தனர். சுவராசியாமாயிருக்குமோ ! என்றெண்ணி சற்று காதை அவர்தம் பக்கம் திருப்பி வைத்தேன்.

நம்ம பையன் கண்ணை அப்பத்தான் பார்த்தேன். கண்கள் குளமாக, முகம் சுருங்கி " ப்ளீஸ் ! அப்படியெல்லாம் சொல்லாதே! எனக்குத் தாங்க முடியாது! "என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தான்.

"சரிதான் வழக்கமான பசங்க டயலாக் தான்!" என்று என்னால் விடமுடியவில்லை. காரணம் அந்த பையனின் கண்ணிலிருந்த உண்மையான வேதனை. அப்பத்தான் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்தேன். ஒரு இள முறுவலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பதினெட்டு வயதில் இப்படி ஒரு ஆண் அழுதுகொண்டிருக்கும் போது அவளால் இவ்வளவு இறுக்கமாக இருக்க முடிகிறது எனில், அவளின் பண்பட்ட மனதை பாராட்டாமிலிருக்க முடியவில்லை. அந்த பண்பட்ட மனதிற்கு ஆண் தயாராக நினைக்கும் முன்னே, பெண் அதில் முனைவர் பட்டம் பெற்று விடுகிறாள்!!

சட்டென்று அப்பையன் தலையில் தட்டி, " டேய்! போடா வீட்டுக்கு?" என்று சொல்ல ஆசைதான். வழக்கமான நகர நாகரீகம் தடுக்க கைகளை கட்டிக்கொண்டு கவனித்தேன்.

உதடுகளை சுழித்துக் கொண்டு அப்பெண் அவன் வேதனையை ரசித்த விதம் என்னால் மறக்க முடியாது.

இது போன்ற காதல் தோல்வி அநேகமாக எல்லோர் வாழ்விலும் வந்து தான் செல்கிறது. எனக்கும் அது உண்டு!? சில வருடங்களுக்கு முன்பு அந்த வேதனையின் சுவையை நானும் உணர்ந்தேன்.

அவ்வளவு தான் வாழ்க்கை! என்று கதறித்துடித்தேன். என்ன விதி!! என்று எண்ணி அழுதிருக்கிறேன். இப்போது கண் முன்னே ! அது போல் ஒரு காட்சி பார்க்கும் போது தான், அன்று நான் இருந்த கோலம் எத்தகையது என உணர முடிந்தது. கவியரசரின் கீழ்க்கண்ட பாடலை அன்று என்னை பலமுறை பார்க்க வைத்தது.

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்காதலித்து வேதனையில் வாட வேண்டும்! பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"

"அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்க விட்டு ஆடடா! ஆடு!! என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!!?

படுவான்! துடித்திடுவான்!! பட்டதே போதுமென்பான் !? பாவியவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"


சுற்றிலும் சுமார் 200 பேர் உள்ள ஒரு இடத்தில் ஒரு மனசு ரணகளமாக்கப்பட்டு, இன்னோர் இதயத்திற்கு மண்டியிடும் போது வரும் அனுபவம் பெரும்பாலனவர்களை முடக்கிப் போடுகிறது.

இதுநாள் வரை மாநகர இளைஞர்கள் எல்லாம் புத்திசாலிகள். நகர , கிராமத்து இளைஞர் தாம் காதலால் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்ற என் எண்ணம் தூளானது.


இம்மாதிரி இளைஞர்கள் இனி என்ன செய்வார்கள். தவறான காதல் அவன் வாழ்க்கையையும் தவறாக மாற்றுமா! இனி திடமாய் காதலிப்பானா?? இல்லை எப்படி இன்னோர் இதயத்தை கொல்வது என்று திட்டமிடுவானா!நான் மனதை பலவாறு திடப்படுத்திக்கொண்டு, திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழும் போது தான், காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து வைத்திருக்கிறது! என்பது புரிந்தது. அதே அனுபவம் உனக்கும் ஏற்படட்டும் என்று மானசீகமாக, அந்த இளைஞனுக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டேன்.


"காதல் ஒரு கடல் மாதிரிடா! அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா!!"

"இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்! எதனையும் புரிஞ்சு நடக்கணும்!!காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா ?!


ஆழ்வார்பேட்டைக்காரர் இப்படிச் சொன்ன அர்த்தம் இன்று விளங்கியது.பாரதி சொன்னதும் புரிந்தது.

"காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;கலவியிலே மானுடர்க்குக் கவலை
தீரும்;காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக
ளுண்டாம்;ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!அஃதன்றோ இவ்வுலகத் தலைமை
யின்பம்;காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;கவலைபோம்,அதனாலே மரணம்
பொய்யாம்."

Friday, January 12, 2007

பொங்கலோ பொங்கல்!

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

நீங்கள் பண்பட்டு, பண்பாடு காத்து , மேலும் பலச்சிறப்புகள் அடைய உள்ளார்ந்த வாழ்த்துகள்..!!

இப்பதிவில் நிறையப் புகைப்படங்கள் (வலையிலிருந்துப் பெறப்பட்டது ) இருக்கின்றன என விரைவாய் முடித்துவிடாது, நிதானமாய் ஒருமுறையாவது பாருங்களேன்..

நம்மில் எத்தனை( அநேகமாய் அனைவரும்) பேருக்கு இப்படி இது போன்ற ஒரு பொங்கல் மீண்டும் கொண்டாட முடியுமோ??

நமக்குத் தான் உலக சின்னத்திரை வரலாற்றிலேயே முதன்முறையாக காட்டப்படும் படங்களும், "பொங்கள் ஷாப்பிடுவது யெப்படி?" என்ற சிறந்த பேட்டிகளும் காத்திருக்கிறதே.!!பின்குறிப்பு:
"பொங்கல் செய்வது எப்படி?" என்று யாராவது விரைவில் விரிவாக எழுதுவார்கள் என்று நம்புவோமாக!

ஆயினும் என் பங்குக்கு பின்வரும் ஒரு சிறு செய்தி...
"அரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என இரு வகைப்படும். வெண் பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது.

உலையில் உள்ள நீரை பொங்கவிட்டு பொங்கல் செய்யப்படுவதானால், பொங்கல் என்பதை ஆகுபெயராகவும் கருதலாம்."

மீண்டும் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துகள்.
பொங்கலோ!! பொங்கல்..!!!!!
Thursday, January 04, 2007

உங்களுக்காக புத்தாண்டு பரிசு.இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்துக்கள்.

உங்களுக்கு ஒரு சிறுபரிசு.

வேறென்னங்கத் தரப்போறேன்.ஒரு காலண்டர் தான்.(e-calender).

(மேலே உள்ள காலண்டரை கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)

பின் குறிப்பு:
இந்த e-calender MS-EXCEL'ல் உருவாக்கப்பட்டு ZIP format-ல் உள்ளது.

ZIP files= compressed files.

ஏதேனும் குறையிருந்தால் தெரிவியுங்கள் நன்றி.