"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, October 25, 2006

வாஞ்சிநாதன்-(குறிப்பு : விஜயகாந்த் படம் பற்றியல்ல)


வெறும் ராட்டையால் மட்டும் பெறப்படவில்லை சுதந்திரம்.

வாஞ்சிநாதன் இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.


எப்படியாவது இவரின் ஒரு புகைப்படமாவது கிட்டுமென மெனக்கெட்டும் கிடைக்கவில்லை.
மிகவும் வருத்தமாக இருந்தது.(என் தேடலும் முழுமையாய் நடக்கவில்லை..என் செய்வது கூகுலின் தேடல் தான் இன்று வலைப்பதிவாளர் எல்லையாயிற்றே!!)

 மேலும்
நாம் மறந்து போன மகத்தானவர்களில் எனக்கு முதன்மையாய் தோன்றியது இவர் பெயர் தான். ஒரு தமிழ் படத்தில் வந்த காட்சி(படத்தின் பெயர் நினைவில் இல்லை) எனது மனதில் இன்றும் இருக்கிறது. ஆஷ் துரை என்ற பரங்கியனை சுட்டி வீழ்த்தி தன்னையும் மாய்த்துக்கொள்ளும் அந்த வீரமிகு காட்சி ..நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்கிறது.

இவ்வாறெல்லாம் அந்நியரை வெளியேற்றிய முதன்மைக்கட்சியாம் காங்கிரஸ் தான் இன்று மீண்டும் ஒரு அடிமைத்தனத்தை வளர்த்தி வருகிறது outsourcing என்ற பெயரால்..

இதைப்படிப்பவர்கள் படித்தவர்கள் படிக்காதவரிடம் காட்டுங்கள்..இன்னும் இந்த புண்ணிய பூமியில் மறக்கப்பட்ட மஹாத்மாக்கள் நிறைய உண்டு என்று.


அவர் பற்றிய ஒரு சிறியக் குறிபபுத் தொகுதி-(ஒரு முறையாவது படியுங்களேன்)

1. இவர்தான் ஆங்கிலேயரிடம் கணக்குத் தீர்த்தவர்



ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள். கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள். வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள். சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்களின் உடல்களைச் சுற்றி இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டு அவர்கள் நடக்கும் பொழுது "கிளிங்' "கிளிங்' என்று ஓசை எழுப்பியதால், தமிழர்களுக்கு ""கிளிங்கர்கள் என்ற பட்டப் பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடிபிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.



2. இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப் பட்டவர்.



இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 இல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 3. இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிக்கையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர். இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது ""வந்தே மாதரம் பத்திரிக்கையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார். ""திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்.



வாஞ்சிநாதனும் வ.உ.சியும்



வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை. மாறாக, ""நல்ல செய்தியைச் சொன்னாய் நீ நலம் பெறுவாய் என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார். ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது & கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், ""இங்கிலாந்து சக்கர வர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது ""இப்பொழுது மட்டுமல்ல, இனி எப் பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால் ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. சூரரைப் போற்று என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.



நன்றி:
மாலை மலர் கட்டுரை.

 

5 comments:

dondu(#11168674346665545885) said...

நீங்கள் குறிப்பிட்ட படம் "கப்பலோட்டிய தமிழன்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

We The People said...

அப்ப சில அறிவுஜீவிகளும்/பொது புத்தி உள்ளவங்க சொல்லற மாதிரி இவரும் அப்சல் மாதிரி ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரன்னு சொல்லறீங்க தானே!!! ;)

ஜடாயு said...

வீர வாஞ்சி பற்றிய அரிய செய்திகளைப் பதிவில் வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.

தமிழகத்தின் பல விடுதலை வீரர்களையும் பற்றி எழுதிய முதுபெரும் எழுத்தாளர் ரகமி வீர வாஞ்சி வாழ்க்கையின் பின்னணியில் ஒரு அருமையான நாவல் எழுதியிருக்கிறார். உணர்ச்சிகரமான, அதே சமயம் பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நாவல் அது.

தமிழகத்தின் நெஞ்சை நிமிர வைத்த மாவீரர் வாஞ்சி.

RBGR said...

நன்றி.டோண்டு ஐயா. இப்போது நினைவுக்கு வருகிறது.

//
அப்ஸல் பத்தி நிறைய பேச வேண்டி இருக்கு பேசுகிறேன்.
நன்றி.we the preople.

//
ஜடாயு அவர்களுக்கு மிகவும் நன்றி.
இன்னும் நிறைய செய்திகளை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் செய்திக்கு நன்றி.

Unknown said...

நண்பரே,
அப்படியே எஸ் ராமகிருஷ்ணனின் "வரல் ஆற்றின் திட்டுகள்" மற்றும் அதன் பின்னூட்டங்களையும் படியுங்கள்.

http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=20&fldrID=1

நிறைய புதிய தகவல்கள் கிடைக்கும்.