"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, March 13, 2007

கார்டூன் வன்முறைகள்.


கார்டூன் என்ற வரைபடக்கதை சொல்லும் முக்கிய ஊடக முறை வால்ட் டிஸ்னி
என்ற ஒரு மனிதரால் உலகப் புகழடைந்தது.

இன்றும் நம் மனதின் ஆட்டோகிராப்களாய் உள்ள சில கதாநாயகர்கள் பற்றி லக்கிலுக்கின் விரிவான பதிவைக் கண்டால் உங்களுக்கு நினைவு வரும்.

ஆனால், அன்று ஆர்ச்சியும், ஸ்பைடர் மேன்( இவர் வில்லனாகத் தான் வருவார்), முகமூடி, இரும்புக்கை மாயாவி போன்றவர்களின் அச்சு ஊடக வன்முறை நம்மை ( அதாவது சென்ற தலை முறை இளைஞர்களினை..... 30+ எனபது சரியா இருக்குமா!!?) பெரும்பாலும் பாதிக்கவில்லை.

அவன் கையில் காமிக்ஸ் கிடைச்சாப் போதும் உலகை மறந்திருவான் என்று என் அப்பா பெருமையுடன் பேசக் கண்டிருக்கிறேன்.

தேர்வுகள் முடிவை விட லயன் காமிஸின் கோடைக்காலச் சிறப்பு மலருக்காக காத்திருந்த காலங்கள் அவை.

ஆனால், இன்று மருத்துவர்களும், மனவியல் வல்லுநர்களும் " உடனடியாக குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை தடுத்து நிறுத்துங்கள் " என்று அலறுகிறார்கள்.

ஏன் ! என்று யோசித்த போது நாம் படித்தோம் இத்தலைமுறை பார்க்கிறது என்பதா என்றால், ஒவ்வொரு ஞாயிறும் ஸ்பைடர் மேனும், heman -ம், மிக்கி மெளசும், டொனால்ட் அங்கிளும் நாமும் பார்த்தபிறகே வந்துள்ளோம் இல்லையா!

இதன் தாக்கம் எனக்கும் ஒரு வாரிசு வந்து, அவள் தொலைக்காட்சி பார்த்த வாறே உண்ணும் போது தான் புரிந்தது.

அன்று நமக்கு சோறூட்ட பாட்டிகளும்( ஆத்தா) நிலாவும் இருந்தது.

இன்று பாட்டிகள் ஊரில், நிலா முற்றம் செல்ல மின் தூக்கியில் மொட்டை மாடி செல்ல வேண்டும். எனவே, நமது இல்லத்தரசிகள் மிகச் சுலபமாய் ( என்ன! ஒரு அரை மணி நேரம் தானே என்று !? அதுவும் சீரியல் பார்க்கும் நேரம் போக) சோறூட்ட ஆரம்பித்து இன்றைய தலைமுறையின் வன்முறை முகத்தின் முதலாக்கியிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்ல.


ஆனால், இன்றும் அனைத்துத் தரப்பினரும் ரசித்து பார்க்க வைக்கும் அருமையான கார்டூன் சார்ந்த படங்களும் ( ஸ்டூவர்ட் லிட்டில் போன்ற), மனதினை நெருடச்செய்யும் ( ஈ.டி போன்ற) படங்களும், வியப்பிலாற்றும் வகையில் உள்ளது.

எனது தெரிவுகள்:

லயன்கிங் கார்டூன் படத்தில் வரும் சிம்பா , மும்பா ( Pumbaa,Simba) வரும் ஒரு நிகழ்ச்சி தமிழில் ஒலிமாற்றம் செய்யப் பட்டு வருகிறது. அருமையான நகைச்சுவை வசனங்கள் மற்றும் பொருத்தமான குரல்தேர்வு. அந்த உயிருக்கு உயிரான நண்பர்கள் அடிக்கும் லூட்டி ரசிச்சு சிரிக்கலாம்.

போகோ (pogo) என்ற சேனலின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் அருமையிலும் அருமை. அதுவும் குறிப்பாக ஆஸ்வோல்டும்(oswald), நாடியும் ( noddy) மிகவும் அருமை. நல்ல கருத்துகளையும் மிதமான இசையும் அருமையான வண்ணப்படங்களும் கொண்ட இவை இரண்டும் டாப் என்றே நினைக்கிறேன்.


மேற்கூறியவை அளவில் சிறியவை ஆனால், இவையல்லாது பவர் ரேஞ்சர் போன்றவற்றை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என்ற பலரின் கோரிக்கை பல நாட்களாகவே கிடப்பில் போடப் பட்டுள்ளது. சில விபத்துகளும் சாவுகளும் நடந்தும் அரசு இதை கவனிக்கவேயில்லை.

குழந்தைகள் வாழ்வினை கட்டணச்சேனலாக்கி, கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாயிருக்கும் சேனல்களினை உடனையாகத் தடை செய்யவேண்டும்.

அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகள் வன்முறைக் கற்றுக்கொள்வதில் விருப்பம் தெரிவிக்கலாம் ! ஆனால் நடுத்தரவர்க்கம் அல்ல!! முக்கியமாய் எங்கள் குழந்தைகளல்ல!

வரும் தலைமுறைகளுக்கு பாட்டிக் கதைகள் இல்லாமல் செய்து விட்ட பெருமை உங்கள் உலகமயமாக்கலும், எங்களினை பொருள் தேடி திரைக்கடலோட வைத்த பொருளாதாராக் கொள்கைகளும் தானே!

அடுத்த தலைமுறைக்கு வன்முறை கற்றுக் கொடுக்காதீர்கள். பின்னர் எங்களைப் போல் விண்ணப்பங்களிட்டு காத்திராது, வாளினை எடுப்பர் என்பதினையும் மறந்து விடாதீர்கள்.

---
இப்பதிவிற்கு தொடர்புடைய இடுகைகள்:
காமிக்ஸ் ரசிகர்களுக்கு! நன்றி லக்கியாரே! நல்ல நினைவூட்டலுக்கு...

2 comments:

லக்கிலுக் said...

மிக சிறப்பான ஒரு உளவியல் கட்டுரையாக இதைப் பார்க்கிறேன். இக்கட்டுரை சார்ந்த விஷயங்களை நேரில் விவாதிப்பதே சரியாக இருக்கும். பதிவுகளாக எழுதித் தள்ள மாளாது...

நாம் படித்த காமிக்ஸ்களுக்கும், இன்றைய டிவி கார்ட்டூன்களுக்கும் இருக்கும் வித்தியாசம் ஏராளம்...

நல்ல பதிவு தந்ததற்கு நன்றி தமிழி. இதுபோன்ற பதிவுகளை தமிழ் வலையுலகில் காண்பது மிக அரிது.

தமிழி said...

நன்றி லக்கி! ஆனால், இது மெத்தனமின்றி கவனிக்க வேண்டிய விடயம் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.