"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, March 08, 2007

தினம் மகளிர்தினம்!?


பெண் உரிமை பற்றிப் பெரியார் அவர்களின் கருத்து:

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும் இழிவையும், அடிமைத் தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம், எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம், என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.


" ‘கற்பு’ என்ற சொல்லை வைத்து, பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது எமது இனம்.... ஆண்-பெண் இருபாலாரும் சரிசமமாக சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும் என்றால், கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் ஒருப்போன்ற நீதி ஏற்பட வேண்டும் "தமிழ் இலக்கியத்தில், ஒரு பெண்ணுக்கு, கற்பு நிலையைப் பேணும் நிலை மூன்றாகச் சொல்லப்படுகின்றது:-

1. கன்னிப்பருவக் காவல்: அதாவது திருமணத்துக்கு முந்திய கன்னிப் பருவத்தில் கன்னிமையைக் காத்தல்.
2. கடியிற் காவல்: அதாவது திருமணமான பின்பு தன் கணவனோடு இல்லறம் நடாத்தும்போது ‘பதிவிரதா தர்மத்தை’ப் பேணுதல். இது மனையறம் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
3. கைம்மைக் காவல்: தனது கணவன் இறந்தபிறகு, அவனது நினைவாக நோன்பு நோற்று, தன் மனத்தையும், உடலையும் காத்தல். இது ‘மாதவம்’ என்று அழைக்கப் படுகின்றது, போற்றப் படுகின்றது.

திருக்குற்றாலப்புராணம் பெண்கள் கற்புக்கரசிகளாக விளங்குவதற்கு 12 செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
அவை:
1. சிறுகாலை எழுதல்.
2. உடன் சமையல்கட்டிற் புகுதல்.
3. நன்றாக கூட்டிச் சமைத்தல்.
4. சுவை குன்றாது அதனைப் பரிமாறுதல்.
5. வீட்டைத் திருத்துதல்.
6. வருந்தும் காலத்திலும் விருந்து உபசரித்தல்.
7. குழந்தைகளைப் பெறுதல்.
8. பெறும்போது இன்புறுதல்.
9. அச்சம், மடம், நாணம் உடையவளாக இருத்தல்.
10. கணவன் உறங்கிய பின் உறங்குதல்.
11. அவன் எழுவதற்கு முன் எழுதல்.
12. காலை எழும்போது அவனைத் தொழுது எழுதல்.

இவ்வாறெல்லாம் வாழ இயலுமா! இதை கலாச்சாரம், பண்பாடு என்று கற்ற அறிவு சொன்னாலும் சகோதிரியாய் , தாயாய், மகளாய் அனைத்துமான தோழியாய் பெண்ணைப் பார்க்கும் போது, ஏன் அவர்களுக்கு மட்டும் அவ்வளவு கட்டுக்கோப்பு! என்றே எண்ணத்தோன்றுகிறது.என்னைப் பொருத்தவரை பெண்ணிய வளர்ச்சிகள்:
கைம்பெண்கள் எனப்படும் கணவன் இறந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வாழ்க்கை வேதனைகள் இன்று குறைக்கப் பட்டுள்ளது. அதற்கு சமுதாயம் மட்டுமே காரணம் அல்ல. அப்பெண்கள் தீரத்துடன் போராட எடுத்துக்கொண்ட வலிவு தான் காரணம்.

தாயே ஆனாலும், நல்ல காரியம் என்று வெளியே போகும்போது, அவள் விதவையாயிருந்தால் எதிரே வரக்கூடாது !என்ற மூடநம்பிக்கை வரையறையெல்லாம் தூக்கியெறியப்பட்டன.

இளம் வயது திருமணம், பெண் கல்வி போன்றவை சில (10-20) ஆண்டுகளில் தான் மாறியுள்ளது. இன்னும் வளர்ச்சி வேண்டும்.

இன்று தொழில்நுட்ப பூங்காக்களின் செல்லப் பிள்ளைகள் பெண்களே !!

கடைசியாக,
பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமை என்றெல்லாம் பேசி நேரம் கழித்துக் கொண்டிருந்த பெண்கள் இன்று பெரும்பாலும் இல்லை. ஏனெனில் அவர்கள் செயலில் காட்டத் துவங்கி விட்டனர்.

ஆனால், இது போதுமா! இல்லையா! என்பது பெண்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய விடயம்.3 comments:

ஜெஸிலா said...

//ஏன் அவர்களுக்கு மட்டும் அவ்வளவு கட்டுக்கோப்பு! என்றே எண்ணத்தோன்றுகிறது.// உங்கள் எண்ணத்தை கேலி செய்வதாக இருக்கிறது அந்த 'wall of feminism' படம்.

தமிழி said...

////ஏன் அவர்களுக்கு மட்டும் அவ்வளவு கட்டுக்கோப்பு! என்றே எண்ணத்தோன்றுகிறது.// உங்கள் எண்ணத்தை கேலி செய்வதாக இருக்கிறது அந்த 'wall of feminism' படம்.//

அது எனது கருத்தல்ல ஜெஸிலா!

இப்படியாகத்தான் பெண்ணியம் கருதப்படுகிறது. உண்மையான பெண் உரிமை என்னவென்பதென்ன!? என்று புரியாத கூட்டமே பெரும்பான்மை என்று அச்சித்திரம் சொல்கிறது என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

நல்லதொரு பதிவு...

செந்தழல்