ஈடற்ற இழப்பு!!
மனித உயிர்களின் வரவு செலவு தொடரும் என்று அறிவு சொன்னாலும், உள்மனம் தாங்காத இழப்புகள் சில உண்டு. அதில் நண்பர் கல்யாண் அவர்களின் ஈடு செய்ய இயலாததும் உண்டு.
சில மாதங்களுக்கு முன் நடந்த வலைப்பதிவர் சந்திப்பின் போது சட்டென்று இனிப்புகளுடன் அறிமுகமாகி நான் சாகரன் என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறேன். சமீப காலமாய் நிறைய எழுத இயலாத சூழ்நிலை என்றார்.
நிறைய எழுதுங்கள் நண்பரே! என்று ஒருமித்துச் சொன்னனர் நண்பர்கள்.
மேலும், தேன் கூட்டை நடத்திவரும் குழுமத்தை சார்ந்தவர் என்று சொன்னதும் வியந்து போனோம் அனைவரும்.
விரைவாய் வாழ்த்துகளும், விமர்ச்சனங்களும் ஆங்காங்கே எழ, இரண்டையும் புன்சிரிப்புடனே ஏற்றுக் கொண்டார். பதிவிணையத்திலுள்ள தனிமனித தாக்குதல், சாதி இனச் சண்டைகள் மீதுதனக்கும் உள்ள ஆதங்கத்தையும் தெரிவித்தார். பின்பு அனைவர்க்கும் வாழ்த்துக் கூறி விடைபெற்றார்.
அடுத்த நாளில் எனக்கு ஒரு தனிமின்அஞ்சலில் எனது தொலைப்பேசி எண் கேட்டு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. கல்யாண் என்றுமிருந்தது. குழப்பமாக சில வலைப்பதிவு நண்பரிடம் கேட்டேன்!? யாருக்கும் தெரியவில்லை.
பின் நான் எனது எண்ணைத் தந்தபின் தொடர்பு கொண்ட பின்பு தான் தெரிந்தது.
அன்றைய சந்திப்பினில், நான் சொன்ன எனது கருத்துகளை ஆமோதித்தார். பின்பு, சில ஆலோசனைகளை பரிமாறிக்கொண்டோம்.
பின்பு, சில முறை மட்டுமே பேச முடிந்தது. சில முறை இணைய தனிஉரையாடல் நடந்தது. ஆனால், என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார் நண்பர்.
நேற்று ஒரு குடும்ப விசேசத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்த போது, நண்பர் ஜெய் தனித் தொலைப்பேசியில் பேசினார்.
அவர் சொன்ன தகவல் " நண்பர் கல்யாண் மாரடைப்பால் காலமானார் !??" என்பது. என் இதயம் சில விநாடிகள் நின்று துடித்தது.
என்னை அறியாமால் " ஐயோ! கடவுளே! " என்று கத்தி விட்டேன்!
"நிஜமா! வதந்தியா! " என்று புலம்பினேன்.
இவ்வளவு தானே வாழ்க்கை! இதற்குள் எதற்கு இத்தனை சண்டைகள், தனிமனித தாக்குதல்கள், போர்கள்....
குறைந்த பட்சம் ஒரு உள்ளமாவது அவருக்காக தன் போர்வாளைக் கீழே போட்டு, அவர் ஆசைப்பட்ட நல்ல தமிழ் இணையம் உருவாக செய்தால், அன்னாரது மனசு இன்னும் அமைதியாயிருக்கும் என்பது என் வேண்டுகோள்!
கடவுள் எப்போதும் தனக்குப் பிடித்தமானவரை தன்னிடம் வைத்துக் கொள்வார். ஆனாலும், அவர் பிரிவால் வாடும் அவர் தம் குடும்ப நிலைமையை எண்ணிப் பார்த்தால் மனசு வலிக்கிறது. அதனை யாராலும் ஈடு செய்ய இயலாது! அவர்தம் குடும்பம் அமைதிபெற இறைவனை பிராத்திப்போம்.
தமிழ் வளர, தன்னாலியன்றவற்றை தைரியமாகச் செய்த அந்த நல் உள்ளம் அமைதியாய் கடவுளிடம் இருக்கட்டும்.
2 comments:
:(((((
//குறைந்த பட்சம் ஒரு உள்ளமாவது அவருக்காக தன் போர்வாளைக் கீழே போட்டு, அவர் ஆசைப்பட்ட நல்ல தமிழ் இணையம் உருவாக செய்தால், அன்னாரது மனசு இன்னும் அமைதியாயிருக்கும் என்பது என் வேண்டுகோள்!//
நல்ல வேண்டுகோள்!
உங்களுடன் சேர்ந்து நானும் வேண்டுகிறேன்.
Post a Comment