"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, February 13, 2007

ஈடற்ற இழப்பு!!

மனித உயிர்களின் வரவு செலவு தொடரும் என்று அறிவு சொன்னாலும், உள்மனம் தாங்காத இழப்புகள் சில உண்டு. அதில் நண்பர் கல்யாண் அவர்களின் ஈடு செய்ய இயலாததும் உண்டு.

சில மாதங்களுக்கு முன் நடந்த வலைப்பதிவர் சந்திப்பின் போது சட்டென்று இனிப்புகளுடன் அறிமுகமாகி நான் சாகரன் என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறேன். சமீப காலமாய் நிறைய எழுத இயலாத சூழ்நிலை என்றார்.
நிறைய எழுதுங்கள் நண்பரே! என்று ஒருமித்துச் சொன்னனர் நண்பர்கள்.
மேலும், தேன் கூட்டை நடத்திவரும் குழுமத்தை சார்ந்தவர் என்று சொன்னதும் வியந்து போனோம் அனைவரும்.

விரைவாய் வாழ்த்துகளும், விமர்ச்சனங்களும் ஆங்காங்கே எழ, இரண்டையும் புன்சிரிப்புடனே ஏற்றுக் கொண்டார். பதிவிணையத்திலுள்ள தனிமனித தாக்குதல், சாதி இனச் சண்டைகள் மீதுதனக்கும் உள்ள ஆதங்கத்தையும் தெரிவித்தார். பின்பு அனைவர்க்கும் வாழ்த்துக் கூறி விடைபெற்றார்.

அடுத்த நாளில் எனக்கு ஒரு தனிமின்அஞ்சலில் எனது தொலைப்பேசி எண் கேட்டு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. கல்யாண் என்றுமிருந்தது. குழப்பமாக சில வலைப்பதிவு நண்பரிடம் கேட்டேன்!? யாருக்கும் தெரியவில்லை.
பின் நான் எனது எண்ணைத் தந்தபின் தொடர்பு கொண்ட பின்பு தான் தெரிந்தது.

அன்றைய சந்திப்பினில், நான் சொன்ன எனது கருத்துகளை ஆமோதித்தார். பின்பு, சில ஆலோசனைகளை பரிமாறிக்கொண்டோம்.

பின்பு, சில முறை மட்டுமே பேச முடிந்தது. சில முறை இணைய தனிஉரையாடல் நடந்தது. ஆனால், என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார் நண்பர்.

நேற்று ஒரு குடும்ப விசேசத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்த போது, நண்பர் ஜெய் தனித் தொலைப்பேசியில் பேசினார்.

அவர் சொன்ன தகவல் " நண்பர் கல்யாண் மாரடைப்பால் காலமானார் !??" என்பது. என் இதயம் சில விநாடிகள் நின்று துடித்தது.

என்னை அறியாமால் " ஐயோ! கடவுளே! " என்று கத்தி விட்டேன்!

"நிஜமா! வதந்தியா! " என்று புலம்பினேன்.


இவ்வளவு தானே வாழ்க்கை! இதற்குள் எதற்கு இத்தனை சண்டைகள், தனிமனித தாக்குதல்கள், போர்கள்....

குறைந்த பட்சம் ஒரு உள்ளமாவது அவருக்காக தன் போர்வாளைக் கீழே போட்டு, அவர் ஆசைப்பட்ட நல்ல தமிழ் இணையம் உருவாக செய்தால், அன்னாரது மனசு இன்னும் அமைதியாயிருக்கும் என்பது என் வேண்டுகோள்!


கடவுள் எப்போதும் தனக்குப் பிடித்தமானவரை தன்னிடம் வைத்துக் கொள்வார். ஆனாலும், அவர் பிரிவால் வாடும் அவர் தம் குடும்ப நிலைமையை எண்ணிப் பார்த்தால் மனசு வலிக்கிறது. அதனை யாராலும் ஈடு செய்ய இயலாது! அவர்தம் குடும்பம் அமைதிபெற இறைவனை பிராத்திப்போம்.

தமிழ் வளர, தன்னாலியன்றவற்றை தைரியமாகச் செய்த அந்த நல் உள்ளம் அமைதியாய் கடவுளிடம் இருக்கட்டும்.

Thursday, February 08, 2007

தமிழன் எப்போதும் இளைத்தவனல்ல!!


காவிரி என்ற ஒரு நதியை மட்டுமல்ல, அனைத்து நதிகளும் தேசியமயமாக்கப்படவேண்டும்! என்ற கருத்தை வெறும் பேச்சாக மட்டுமே கொள்ளாமல், நடைமுறைப்படுத்தும் கட்சிக்கு அல்லது அமைப்பிற்கு , எமது விவசாயத் தோழர்கள் மற்றும் தமிழர்கள் சாகும் வரை நன்றியோடிருப்பார்கள்.

ஆங்கிலயேன் வந்து ஒற்றுமைப் படுத்தியிருக்கலாம் இப்பொழுதுள்ள இந்தியாவை. ஆனால், சிந்து நதி சார்ந்த ஒரு இந்து நாகரிகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி விட்டது. இன சண்டைகளால் கூறு போடப்படும் இந்தியா,ஆரம்பம் முதலே சிலரால் ஆரிய, திராவிட சண்டைகள் உருவாக்கப்பட்டு, அருமையான நாகரீகத்தை அழிக்கப்பட்டது.

மணல் மேட்டினை மட்டுமே அறிந்த ஒரு கூட்டம் வளமையான நதியும் அது சார்ந்த ஒரு இனமும் கண்டு "ஆகா!" என்று வந்திறங்கியது. முட்டாள் சனங்கள் நிறைந்த நாடு என்று மெதுவாய் மதம் மாற்ற ஒரு கூட்டம் கடல் வழி வந்தது. ஆரியர் தவிர யாரும் இங்கு தங்க வரவில்லை!! மாறாக எடுத்துச் செல்லவே வந்தார்கள். கஜினிமுகம்மது 17 முறை படையெடுத்து 18 வது முறை வென்றான் என்று நமது அருமை கல்வியாளர் சிலர் சொல்லி வந்தனர். வரலாற்றின் சில மறைக்கப்பட்ட பக்கங்களைப் பார்த்தால் தான் தெரியும், அவன் 17 முறை கொள்ளையடிக்கத்தான் வந்தான் என்று..!!


வாழ்வியலுக்கான நகர்வு என்பது மனித இனம் மட்டுமல்ல...!! எல்லா உயிருக்கும் பொதுதான். இப்போது, நம்மில் சில தமிழர்கள் தம் வாழ்வு
முன்னேற்றத்திற்காக, நல்ல சம்பளம் கிடைக்கிறது!! நல்ல சுகாதாரமான காற்று, நல்ல இரவு விடுதிகள், நல்ல தரமான வாழ்வு என்று தான் பெங்களூர் தொழில் நுட்ப பூங்காவினில் சிறைப்பட்டு(ஆம் சிறைதான்) வருகின்றனர்.

பெங்களூரு தரும் தொழில் நுட்ப பூங்காக்கள் தரும் வசதிகள் இன்று சென்னையில் எந்த வகையிலும் குறைவாக தருவதில்லை. சம்பளமும் தான்.


வரவேண்டியது தானே தாய்நாட்டுக்கு!!(ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கும் போல)


ஆனால், கிட்டத்தட்ட தமிழரில் மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டில் ஒரு பங்கு தமிழர்கள் நம்பியிருப்பது காவிரிப் பாசனத்தைத் தான். ஆனால், எங்கள் தலைவர்கள் கர்நாடகத்தில் வாழும் ஒரு சிறுபான்மை தமிழர் இனத்திற்க்காக மட்டுமே தான் பேசவேண்டுமா!?


சூப்பர் ஸ்டார் கூட அருமையாச் சொன்னார்(!?) சென்ற காவிரி பங்கெடுப்பு பிரச்சனையின் போது, " அங்கே! தமிழர்கள் இருப்பதை மறந்து விடக் கூடாதென்று !? " ...கூடவே! உண்ணா விரதம் வேறு..! நதிஇணைப்பு என்பது இந்தியாவில் நடக்காது என்ற நம்பிக்கையில், "ஒரு கோடி தரேன் என்று வேறு சொன்னார்..!! அதையும் கேட்டு நாங்கள் கையை மட்டுமே தட்டினோம்!!??

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் இது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியில், ஒரு பங்கேற்பாளர் சொன்னார். " அரசியல் தலைவர்களே! நாட்டின் இறையாண்மை சார்ந்த பிரச்சனை இது! உடனே! இதை தீர்த்து வைக்காவிடில் மீண்டும் மாநிலங்கள் நாடுகளாகும் ! இந்தியா என்பது இல்லாமல் போகும்" என்றார்.

பாகிஸ்தானுடன் சிந்து நதியை பங்கிடத் தெரிந்த இந்திய அரசாங்கம், தன் நாட்டு மாநிலங்கிடையே உள்ள உறவுகளைப் பலப்படுத்த ஏன் முயற்சிக்க
வில்லை! இந்தியர் என்ற எண்ணமே இவ்விரு நூற்றாண்டுகள் தாமே! என்ற அலட்சியமா! இல்லை! இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்பிரச்சனையில் குளிர் காயப்போகிறீரார்களோ தெரியவில்லை!!

கன்னடியரே! விட்டுக்கொடுத்தே!? வாழப் பயின்ற தமிழன் ஒன்றும் செய்து விட மாட்டான் என்று தானே ஆடுகிறீர்கள்! கர்நாடக மக்களே! உங்களவரை எங்கள் தலைவியாகவும், சூப்பர்ஸ்டாராகவும் தான் நாங்கள் ஆக்கியிருக்கிறோம்! பெங்களூர் உங்களுடையதாக இருக்கலாம்! அதை விண் உச்சிக்கு கொண்டு சென்ற தொழில் நுட்ப வல்லுநரும், தொழில் மேதைகளும் எம்மவர்! நினைவில் கொள்ளுங்கள்! மைசூரின் கரும்பின் வளமை உருவாக்கப்பட்ட வரலாறு தெரியுமா!


நாங்கள் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆனால், உலகிற்கு வீரத்தை போதிக்கும் அளவிற்கு வரலாறு கொண்டவர்கள்.

இந்தியா என்ற போது வரும் வீர உணர்வு தமிழனுக்கு மிக அதிகம் , பாரதியால் தேசப் பற்று ஊட்டப் பட்டவர்கள் நாங்கள். இன்றோ,தேசம் என்பதே விரைவில் கேள்விக்குறி ஆகிவிடும் என அஞ்சும் நிலைக்குத் தமிழனை தள்ளிக் கொண்டிருக்கின்றனர் அண்டை மாநிலத்தினர்.

கடைசியாக,அரசியல் பேச நான் விரும்ப வில்லை! என்னிடம் புள்ளிவிவர ஆதாரங்களில்லை! ஆனால், நான் சார்ந்த, என் மொழி சார்ந்த ஒரு சமூகம் பாதிக்கப்படும் போது, மன்னிக்கவும் நண்பர்களே!! நாங்கள் எங்கள் குரலை உரத்துத் தான் சொல்ல வேண்டியுள்ளது!!!




******


இவ்விடுகைக்கு தொடர்புடைய இடுகைகள்!





நோ கமெண்ட்ஸ் - இட்லிவடை


ஓடி வருமா காவேரி? -த‌மிழ்ம‌ண‌ விவாத‌க்க‌ள‌ம்.

காவிரி தீர்ப்பு: கர்நாடகத்தின் நிலைப்பாடுகள் - ஜடாயு

Tuesday, February 06, 2007

வெடிவேலு-அஸின் காதல்!

சில சமயங்களில் இது போன்ற ஓற்றியெடுக்கும் காட்சிகள் கூட சிறப்பாய் அமைந்து விடுகிறது. ஆனாலும், கைப்புள்ள மொழியில் சொன்னால் " முடியல!! (சிரிக்காமிலிருக்க!!)".


வலைப்பதிவரிடையே தற்போது நடந்து வரும் மிக கடுமையான வாக்குவாதங்களுக்கு நடுவே இது பார்க்கப்படுமா??
:)





Monday, February 05, 2007

இன்னும் சில மணித்துளிகளில்..!

இன்னும் சிலமணித்துளிகளே உள்ளது..


சற்றுமுன் வந்த செய்தி:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காக பெங்களுர் வாழ் தமிழக மென்பொருள் வல்லுநர்கள் அறையை/வீட்டை விட்டு வெளியேறாது காத்திருக்கின்றனர்கள்.

(விரிவான செய்திகள் இங்கே! )

இந்த கேவலமான வேற்றுமையில் ஒற்றுமை இன்னும் எத்தனை நாளைக்கு நம் அருமையான தானைத் தலைவர்களுக்குச் சோறிடுமோ தெரியவில்லை....
இந்தியா என்ற அமைப்பு எதைச் சார்ந்து உள்ளதென்று கேள்விக்குறியாகி நிற்கிறது.
ஒரு மாநில நக்சலைட்டுகள் "வெளி மாநிலத்தாரே! வெளியேறு! " என்கின்றனர்.

நமது அருமை அன்புக் கேரளம் " இடம் தான் உனது! தண்ணீர் எனது" என்கிறது.

ஆந்திரா "ஆறு அது ஆழமில்லை! எனவே சிறுஅணைதான் கட்டுகிறோம் " என்கிறது.

தமிழா! உனக்கு எங்கு சென்றாலும் உதைதான்!!??

ஆனாலும், பயப்படாதீர்! அண்டை மாநில மற்றும் நாட்டு மக்களே! நாங்கள் வந்தாரை வாழத் தான் வைப்போம் !எங்கள் வாழ்வை தந்தாவது !!




"முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள், இவள்
செப்பு மொழி
பதினெட்டுடையாள்,எனில்
சிந்தை ஒன்றுடையாள்! .."


பாரதியே! இப்போது முப்பது கோடியும் இல்லை! நாங்கள் மொய்ம்புற ஒன்றாகவுமில்லை....!!

வாழ்க பாரதம்! வாழ்க வளமுடன்!


பின்குறிப்பு:
இப்பதிவிற்கு தொடர்புள்ள இடுகைகள்:
காவேரி பெண்ணே வா வா! - கோவி.கண்ணன்

2/3 ? 3/4 ? - இட்லிவடை.

என்ன நடக்கும் இன்று பெங்களூரில்-மோகன்தாஸ்

இமாலயத் திட்டங்கள் -திண்ணையில் சி. ஜெயபாரதன்.

Thursday, February 01, 2007

வேற்றுமையில் ஒற்றுமை!

லண்டன் மாதிரி அழகான பசுமையான நகரை நான் எங்கும் பார்த்ததில்லை !என்று சொன்னார்- பெருநகரவளர்ச்சித் திட்டத்திற்க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் கோப்பில் கையோப்பமிட்டவாறே!- எங்கள் பிரதமர்.


சட்ட ஒழுங்கு மிக நன்றாக உள்ளது!தீவிரவாதிகளை வேரோடு அழித்துவிட்டோம் என்றார்-குண்டு துளைக்காத காரில் வந்திறங்கி ஐந்தடுக்குப் பாதுக்காப்பின் கீழிருக்கும்-எங்கள் உள்துறை மந்திரி.

பணவீக்கமும்,நிதி நிலைமை சீராக உள்ளது என்றார்- உலகவங்கியிடம் மேலும் ஈராயிரம் கோடி கடன் கேட்கும் கோப்பில் பார்வையிட்டபடி-எங்கள் நிதி மந்திரி.

எப்படித்தான் இங்க வாழுறாங்களோ! முட்டாள் ஜனங்கள்! என்று சொன்னார்- அரசு உதவி பெற்று படித்து அமெரிக்காவில் வசிக்கும்- எங்கள் என்.ஆர்.ஐ.

வெள்ளைக்காரன் மாதிரி ஆள இவங்களுக்கெல்லாம் தெரியல என்று சொன்னார்- தியாகிப் பென்சன் பாரத்தில் கைநாட்டு இட்டவாறே- எங்கள் முன்னாள் போராட்ட வீரர்கள்.

பொதுச்சேவை என்பது என் தந்தை தந்த வழிகாட்டுதல் என்று சொன்னார்- புதுசாய் ஆரம்பித்த சுனாமி டிரெஸ்டின் மூலம் மெம்பருக்கு பத்துக் கோடி டாலர் என்று அறிந்த- எங்கள் முதலாளி வர்க்கம்.

நல்ல தலைவன் இல்லாங்காட்டி நாம் முன்னேற முடியாது என்று சொன்னார்- கவுன்சிலர் தேர்தலுக்கு ஓட்டுப் போட கணிசமாக கிடைத்த பணத்தை எண்ணியவாறே- எங்கள் அடித்தட்டு வர்க்கம்.

லஞ்சம் இந்த நாட்டினை விட்டே ஓடவேண்டும் என்று சொன்னார்- தம்பி! போக்கிரி பால்கனி டிக்கெட் ரெண்டு கொடு என்றபடி-எங்கள் மத்திய வர்க்கம்.

நாங்கள் எல்லோரும் இந்தியர்கள் தான்! இதில் உங்களுக்கென்ன சந்தேகம் !?