"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, December 20, 2006

ஏதாவது செய்யனும் சார்....!


இப்பதிவின் நோக்கம் சென்ற ஞாயிறு அன்று நடந்த பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு அலசல் மட்டுமல்ல. அன்று நான் சொன்ன,சொல்ல விழைந்த கருத்துகளைப் பற்றியும் தான்.

முதலாவதாக, அன்று வந்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள்! இச்சிறியேன் பேசிய சிறு செய்திகளையும் செவிமெடுத்துக் கேட்டமைக்கு!!

இந்த சந்திப்பின் நோக்கம் திரு அவர்களின் வருகையும், அவர் பதிவர்களை சந்திக்க இருப்பதும் என அறிவித்தார் லக்கிலுக்.

என் ஆவல் மிகுதியானது.

தனி அலுவல்கள் பல இருந்தாலும் அத்தனையும் புறந்தள்ளி, மார்கழி மாதத்துவக்கம் தந்த மென் பனியில், மெத்தென்ற புல் படுக்கை தந்த சுகத்தில் மெதுவாய் வந்திருந்த அனைவரையும் உற்று நோக்கினேன். ஒரு 25 பேர் இருக்கலாம் என்று கணக்கு போட்டது. ஆனால், 25 போர் வாள்கள் என்று மனசு சொன்னது.

அருள்,ஜெய்சங்கர்,வீரமணி மற்றும் புகைப்படமிட்ட பதிவைக் கொண்ட சில பதிவர் தவிர அனைவரும் எனக்கு புது முகங்களே!

இதுக்கு தானே ஆசைப்பட்டாயடா! என்று மனசு குதியாட்டம் போட்டது.

வெவ்வேறு களங்கள், நாடுகள், ஊர்கள் என விரிந்த உலகினில் பதிவராய் வாழ்ந்ததால் தானே இன்று இங்கு அமர முடிந்தது என மகிழ்ந்தேன்.

நேரம் கடக்க மெதுவாய் பாலபாரதி தன்னை அறிமுகம் செய்து கொண்டு அனைவரையும் சுயஅறிமுகம் செய்யப் பணித்தார். அதுவும் லக்கிலுக் அனைவரையும் அழைத்ததால் அவர் துவங்கட்டும் என்றார். அதில் மற்றும் ஒரு விடயமும் இருந்தது. அதாவது அவரின் இடப்புறம் இருந்த 'ஆலமரம்'எழுதும் 'திரு' அவர்கள் இருந்தது தான். ஆகையால், 'திரு' அவர்கள் முடிவாய் சுய அறிமுகம் செய்து கொண்டு, சந்திப்பின் முதன்மை விடயம் பேசத் துவங்க ஏதுவாய் இருந்தது.

'நீயா அது! '..ஓ! ?' ' நீங்களா அது...!?' ' :) ' என்றெல்லாம் ஆங்காங்கே சிறு கூக்குரல்கள் எழும்ப, ஒவ்வொருவராய் அமர்ந்தபடியே அவர்தம் பற்றிச் சொன்னது நன்றாக இருந்தது.

'திரு' அவர்கள் பேசத் துவங்க, அனைவரும் அமைதியாய் அவர் முகம் நோக்கினார்கள். எளிய நம்மவர் போன்ற பேச்சு, மிகத்தூய்மையான தமிழ் வார்த்தைகள், முயற்சித்துப் பார்க்கச் சொன்ன தமிழ் நடை என அனைத்து அம்சங்களுடன் சொல்லத் துவங்கிய கையெழுத்து இயக்கமும் அதன் குறிக்கோளும் நெஞ்சைத் தைத்துவிட்டது.

பின்னர் தனித்து விடப்பட்ட சிறுசிறு குழுக்களாய்ப் போன பதிவர் கூட்டத்தில் சில நிமிடங்கள் 'திரு' வின் அருகில் இருக்க நேரிட்டது.

அப்போது 'திரு' அவர்களிடம் ''ஓகை' அவர்கள் "உங்கள் தொழில் என்ன?" என்று வினவினார்.

அமைப்புச்சாரா தொழிலாளார்களுக்கான ஒரு அமைப்பில் அங்கம் வகிப்பதாகச் 'திரு' பதில்சொன்னார்.
"அது பணியல்ல! சேவை!! " என்று ஓகை சொன்னார்.
அதனை அடக்கத்துடன் மறுத்தார் 'திரு'.

அருகிலிருந்த நான் வியந்து போனேன். இப்படியும் சிலர் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள். இல்லையெனில் மனிதம் என்றோ மரித்துப் போயிருக்கும்.

ஈழம் பற்றிய மற்றும் ஒரு புதிய பார்வை ஒன்றும் அவர் கூறிவிடவில்லை. ஆனால், நாம் (அநேகமாக) எல்லோரும் வெறும் பேச்சுகளாய், கட்டுரைகளாய், கவிதைகளாய் மட்டுமே ஈழத்தமிழர் தம் அவலங்கள் பற்றிப் பேசிக் கொண்(டே)டிருக்கிறோம். ஆனால், 'திரு' அதற்கான ஒரு முயற்சியை மேற்க்கொண்டுள்ளார்.

கையெழுத்து இயக்கம் என்ன செய்துவிடபோகிறது என்ற வழக்கமான கேள்வி நண்பர்களால் கேட்கப்பட்டது. 'திரு' அவர்கள் பொறுமையாக விளக்கினார்.

எனது பங்களிப்பாக சொன்னவை நான் அறிந்த ஈழத்தமிழர்தம் இந்திய வாழ்வு. கதியற்றவர் அதாவது அகதி என்ற சொல்லடியிலேயே எனக்கு உடன்பாடு இல்லை.

சில தலைமுறைகளுக்கு முன் சென்ற அமர்த்தியா சென் இந்தியர்.
கல்பனா சாவ்லா அரியானா மாநிலத்தில் பிறந்து பின்பு அமெரிக்காவில் குடியேறியவர். தற்போதய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண்.

இப்படியெல்லாம் பெருமை பேசி களிக்கும் நாம், நம் முன்னோர்களின் வம்சாவளியினர் இன்று தந்தை நாடு நோக்கி வலியுடன் வரும் போது என்ன செய்கிறோம் ??

ஒரு கவிஞர் கவிதை பாடுகிறார் !

ஒரு படைப்பாளி கதையில் போர்வாள் தூக்குகிறார் !

சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பிரமாதமாய் ஒடுகிறது !

அவற்றில் அருமையாய் நடித்தவர்க்கு விருதுகள் வழங்கப்படுகிறது !

குறும்திரைபடம் எடுத்து மாணவர்கள் பட்டயம் பெறுகிறார்கள் !

இரங்கட்பா இசைக்கப்படுகிறது !

அரசியலைப் பற்றி சொல்லவே வேண்டாம் !

வழக்கம் போல் நம் பதிவர்கள் ( நானும் தான்) பதிவிட்டு பின்னூட்ட அஞ்சலி செய்கிறோம்.

இதுவா அவர்களுக்கு தேவை ?!?

முதலுதவி தான் இல்லை புரையோடிய புண்ணுக்கும் கூடவா நம்மால் மருந்திட முடியவில்லை.

"ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் புரிந்துகொள்ளாத நாம்தான் விருந்தோம்பல் நாகரிகத்தின் தலைவர்கள் என்று இலக்கியங்களில் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். " என்று நமது பதிவர் " மயிலாடுதுறை சிவா." என்பவர் அவர்கள் அவர்தம் பதிவில் கூறியுள்ளார்.

அது உண்மையா?! மாற்ற நாம் எங்கனம் விழைவது ??

இதெற்கென்ன ஆதாரம் ?? எங்கே செய்தி?? என்பவர்க்காக நான் சில செய்திகளைத் திரட்ட முயன்று வருகிறேன்.

சிலவற்றை இப்போது பதிகின்றேன்.

அவற்றில் முதலாவதாக கீற்று என்ற இணையத்தளத்தில் வந்த http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.html பாருங்கள். நான் கூற வருவது உங்களுக்குப் புரியும்.

அன்றைய பதிவர் கூட்டத்தில் நான் வைத்த வேண்டுகோள் இது தான்.


உலகில் உள்ள தமிழர்கள் 1997 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 74,000,000 பேர்கள்.

இந்தியாவில் மட்டும் : 63,000,000

இலங்கையில் : 3,600,000

மலேசியாவில் : 1,500,000

சிங்கப்பூரில் : 250,000

மற்றவர் உலகமெங்கும்..

தமிழ் தாய்நாடாம் தமிழகத்தை (நம்மை) நாடி வரும் தமிழர்களை, நாம் நடத்தும் பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர் அனைவரும் விடுதலை இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல என்பதனை 'அரசும்' ஏற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் தம் வாழ்வாதாரம் பற்றி கவலை கொண்டு ஆவண செய்ய வைக்க வேண்டும். குறைந்த பட்சம் அகதிகள் முகாம் என்ற மோசமான சிறைச்சாலைகள் தரத்தையாவது முன்னேற்ற வேண்டும். அவர்களுக்கு மீன் கூட வேண்டாம். மீன் பிடிக்க வலைகளையாவது தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


தீர்வுக்காக எனது யோசனைகள்:

1. ஓட்டு வங்கிக்காக போராடும் அரசியல்வாதிகள் நடுவே, சிலர் நம் தமிழர்கள் என்று போராட இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமே இதனை நினைவுபடுத்தலாம். அவர்களை பாராட்டிப் பதிவிடும் பதிவர்கள் இதனையும் சிரமேற்க்கொண்டு செய்தால் இன்னும் மகிழ்ச்சி.

2. யார் பூனைக்கு மணி கட்டுவது எனக் காத்திராமல், சட்டென்று உங்கள் யோசனையை பகிறுங்கள்.

3. கீற்று.காம் போன்ற இணையங்கள் செய்திகள் தான் வெளியிடமுடியும். பதிவர்கள் மற்றும் இதைப் படிப்பவர்களாகிய நாம் அதனை அனைவரிடமும் எடுத்துச் செல்ல (சொல்ல) முடியும்.

4. வெளிநாட்டில் வாழும் அன்பர்கள் இது போன்ற விடயங்களை சிரமேற்க் கொள்ளும் N.G.O. ஏதேனுமிருந்தால் தெரிவியுங்கள்.

5. பண உதவி, பொருள் உதவி எல்லாம் அரசாங்கம் செய்யலாம். மற்றபடி தேவைப்பட்டால் நம்மால் இயன்றவற்றைச் செய்வோம்.

6. கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த வலைப்பதிவாளர்கள் இதனை அனைவருக்கும் சொல்லுங்களேன். நீங்கள் எறியும் சிறு கல், குளத்தில் வட்டமாக பரப்பும்.

7. கண்டனக்குரல் கேட்க வேண்டியவர் செவிக்கெட்டி விடும் என்றாலும் அதற்கான முனைப்பை விட்டிடாது வேண்டியவை நடக்கும் வரை தொடர வேண்டும்.

எனது வருத்தங்கள்:

1. குழுக்கள் அமைத்து உண்மை அறியலாம் என்றொரு யோசனை பகிறப்பட்டது. சான்றுகள் தான் தேவையா! இல்லையெனில் மருந்திட மாட்டீரா! இத்தனை பேர் கூறியும், உங்களுக்கு இன்னும் நம்பிக்கை
இல்லையா!! அது போன்ற குழுக்களின் தீர்வு வரும் முன், எத்தனையோ இதயங்கள் கருகிப் போகலாம். ஆயினும், அது போன்ற ஆய்வரிக்கை வந்து தான் உதவிகள் செய்வோம் என்ற முடிவெடுக்க நாம் என்ன உச்சநீதிமன்றமா !!!

2. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பார்கள். நன்றாக கவனித்தால் நிரந்தரமாக இருந்துவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்! நிச்சயமாக மாட்டார்கள் ?! எந்த ஒரு மனிதனும் தன் கல்லறையை பிறந்த மண்ணில் தான் கட்ட விரும்புவான். அவர்கள் வாழ விரும்புவதும் அவர்கள் மண்ணில் தான். அப்படித்தான் இருந்து விட்டுப் போகட்டுமே உங்கள் ஓட்டெண்ணிக்கை அதிகமாகுமே.

தன் குடும்பம் , தன் வாழ்க்கை முக்கியம் தான்.

இது போன்ற மனிதாபிமான செயல்கள் உங்களைப் புடம் போடும் நண்பர்களே!

நீங்களே உங்களை நம்பாவிட்டால் பின் யார் நம்புவார்கள்??


ஆற்றாமையால் தான் சொல்கிறேன் ! பேசியது போதுமென நினைக்கிறேன்!?

ஏதாவது செய்யனும் சார்....!
தேவையில்லை என்று நினைத்தாலும் சொல்ல விரும்பிய பின்குறிப்பு:

கடைசியாக, இது போன்ற ஈழத்தமிழர் பற்றி பேசுவது, எழுதுவது, செயல்கள் எல்லாம் திராவிடம் சார்ந்தது என சில பதிவர்கள் அன்று வரமுயற்சிக்க வில்லை என்று கேள்விப்பட்டு வியந்தேன். வருந்தினேன்.
தமிழனை திராவிடன் என்று ஒதுக்குபவர்கள், அப்படி நினைப்பவர்கள் தயவு செய்து இனிமேல் வேறு மொழியில் எழுதிக்கொள்ளுங்கள்!? எங்கள் தமிழில் வேண்டாமே உங்கள் பதிவுகள் !

இதுதான் சாக்கு! என்று திராவிடம் இது எனக் கூறி, திராவிட-ஆரியச்சண்டைகளையும் இங்கு அரங்கேற்ற வேண்டாம் நண்பர்களே ??!!

ஆரியம், திராவிடம், விவிலியம்,இஸ்லாமியம்......இவை அனைத்தும் கடந்தது மனிதம்.

நல்லவை நடக்கவே விரும்புகிறோம். வீண் விவாதங்கள் வேண்டாமே!!


இப்பதிவிற்குத் தொடர்புடைய இடுகைகள்:

http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.html

http://manikoondu.blogspot.com/2006/06/blog-post_14.html

பதிவர் வட்ட சந்திப்பு பற்றி தொடர்புள்ள இடுகைகள்:

1. பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை : தமிழ்நதி
2. சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு -சுடச்சுட : அன்புடன் ச.சங்கர்
3. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு -12-17-06 : சிவஞானம்ஜி
4. சென்னை சந்திப்பு-1 : பொன்ஸ்
5. சென்னை சந்திப்பு-3 : பொன்ஸ்

5 comments:

sivagnanamji(#16342789) said...

ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்குப்
பாராட்டுகள்!

தமிழி said...

sivagnanamji(#16342789) said...
//ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்குப்
பாராட்டுகள்! //

நன்றி ஐயா!

உங்கள் யோசனைகளும் இருந்தால் நன்றாக இருக்கும்.
சொல்லுங்களேன்.

மா சிவகுமார் said...

தமிழி,

இதை நீங்களும் செய்ய முடியுமா?

அன்புடன்,

மா சிவகுமார்

மாசிலா said...

உங்கள் 'கீற்று' சுட்டியின் உதவியுடன் திபெத் - இலங்கை அகதிகள் முகாம்களின் வித்தியாசங்களின் நிலையை கண்டு அலர்ந்து போனேன். திபெத் அகதிகளின் பராமரிப்பு சீனாவுக்கு சவால் விடும் போக்கில் செய்யப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
ஈழத்தமிழர்களின் பிரச்சினை வெறும் தமிழர்கள் - புலிகள் - சஞ்சய் கொலை - கருவர்கள் போனற கொடூர கோனலில் இருந்து பார்க்கப்படுகிறது.

அகதிகளுக்காக ஐக்கிய நாட்டு சபையில் இருந்து பணம் பெறப்படுவதாக செய்தி அறிந்தேன். இந்த பணம் சரியான முறையில்
செலவிடப்படுகிறதா என்பதை எப்படி அறிவது? அப்படி இல்லையென்றால் யாரிடம் போய் முறையிடுவது? ஐ. நா.வின் அகதிகள் பராமரிப்பு சட்டங்கள் என்ன சொல்கின்றன? அகதிகளுக்கு என்னென்னெ உரிமைகள் இருக்கிற்து என்பதை அறிந்து, அதன்படி சேவைகள் நடக்கின்றனவா என்பதை விசாரிக்க அரசாங்கம் சாரா தனி சேவை சங்கங்கள் மூலம் முயற்சி செய்யலாம். திரு அவர்கள் ஈழத்து தமிழர்களுக்கு செய்த கையெழுத்து இயக்கம்போல் தமிழ்நாட்டில் உள்ள் அகதிகளுக்கு ஒரு இயக்கம் நடத்தி முதல்வருக்கு அறியப்படுத்தினால் நல்லதாக இருக்குமா?

அன்புடன் மாசிலா!

மஞ்சூர் ராசா said...

பொன்ஸ் பதிவை படித்து இங்கு வந்தேன்.
இங்கு வந்தப்பின் தான் தெரிந்தது, இது சாதாரண சந்திப்பல்லவென.

நீங்கள் சொல்வது போல வெறும் பின்னூட்டம் எழுதிவிட்டு போவதற்கு மனம் உடன்படவில்லை.

ஏதாவது செய்ய முடியும் என தோன்றுகிறது....