தடாலடியாக ஒரு அறிவிப்பு மற்றும் வேண்டுகோள்.
நான் வலைப்பூ உலகிற்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் நிறைய மாற்றங்கள் கண்டேன்.
1.அரசியல் /இன/மத கலப்பின்றி எழுதுவது முடியுமா?
2.இலக்கியம் என்று கூறி வெட்டி வாதங்கள் மட்டும் போதுமா?
3. கார்டூன் / ஜோக் என்று வெட்டி ஒட்டுவேதே சிறந்ததா?
4. சமுதாயச் சிந்தனை என்று உலகளவில் அறிவுரை வழங்குவதா?
5.பின்னூட்டப் போர் மட்டுமே போதும் என நேரம் கழிப்பதா?
6. இதெல்லாம் விட குழுமஉறுப்பினராகி சண்டைகளில் பங்கேற்பதா!
மேற்கூறியவை, இன்றைய வலைப்பூ வேதங்களாகி விட்ட நிலையில், கெளதம்ஜி போன்ற ஒரு சிலரின் வலைப்பூக்கள் என்னைக் கவர்ந்தது.
மேற்கூறிய வகைகளில் இவரும், ஏன் நானும் கூட எழுதியிருக்கலாம். ஆனால், யார் மனதையும் புண்படுத்தாத ஒரு சில பதிவாளர்களில் நானும் ஒருவனாக இருக்க ஆசைப்பட்டேன்.
தேன்கூட்டில் அதிகம் பார்வையிடப்பட்டவை என்றொரு போட்டி. தமிழ்மணத்தில் அதிகம் பின்னூட்டம் பெற்றவை என்றொரு போட்டி.
தேன்கூட்டில் உள்ள குழப்பமான தேர்வுமுறையில் இன்னும் உள்ள மாதந்திரப்போட்டி. தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவு என்று அழைக்கப்பட்டு, இதுவரை அது எப்படி முறைப்படுத்தப்படுகிறது என்று புரிந்து கொள்ள இயலாத ஒரு முறை.
இப்படியெல்லாம் நான் பார்த்து குழம்பிய காலக்கட்டத்தில், தடாலடிப் போட்டி என்று பார்த்து, மிகவும் ஆவலுடன் கலந்து கொண்டேன்.
ஆனால், அந்தப் போட்டி இன்று நிறுத்தி வைக்கவும் நானும் ஒரு காரணமாகிவிட்டேன்.
ஆம் நண்பர்களே! கெளதமிற்கு தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தவன் நானே!
!?!!?!!!
ஆனால், அந்த வேண்டுகோள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது போல் தெரிகிறது. நான் விடுத்த வேண்டுகோள் இது தான்.
உண்மையான பெயரில் எழுதுவது என்பது பாலகுமாரன் காலத்திலேயே இல்லை. ஆனாலும், இங்கு எழுதுபவர்கள் எல்லோரும் வெறும் புகழுக்காக மட்டும் பதிவதில்லை. நம் எழுத்தையும் சிலர் படிக்கிறார்கள் என்ற ஒரு சிறு மகிழ்ச்சி மட்டுமே தவிர வேறில்லை.
இதில் தடாலடிப்போட்டியின் பங்கு சிறிதோ,பெரிதோ ஆனால், குறிப்பிடத்தக்கது.
எனவே சிலரின் படைப்புகளுக்கு மட்டுமே தொடர் பரிசு என்பது சில சந்தேகங்கள் வர இடமளிக்கிறது. அதை சில பதிவர்கள் நேரிடையாகவே என்னிடம் சொன்னபோது, நான் வருத்தமடைந்து உடனடியாக கெளதம்ஜியிடம் பகிர்ந்தேன்.
மற்றவர்க்கும் வாய்ப்பளியுங்களேன்!? என்ற போது, அவர் அவரின் நியாய வாதங்களையும், தேர்ந்தெடுக்கும் முறையையும் சொன்னார். (இதை அவர் பதிவிலும் சொல்லியுள்ளார்)
மேலும், ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முதலாவதாக வரலாம் ! எப்படி 2,3, ஆறுதல் என வரச் சாத்தியம் என்றேன்.
ஆனால்,நல்ல விடைகளை ஒருவரே அனுப்பும் போது எப்படி நான் ஒதுக்குவது என்றும் சொன்னார்.
அதுவும் உண்மைதான்.
இருந்தாலும், புதியவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஏதேனும் வாய்ப்பு பாருங்களேன் என்ற ஏக்கத்தை அவரிடம் பதிந்தேன்.
அவருக்குள்ள நிர்வாகச்சிக்கல்களைச் சொன்னார். இந்த போட்டி போன்று வேறு ஏதேனும் துவங்க அனுமதி வாங்குவது கடினம் என்றார்.
ஆகவே, கெளதம்ஜி தம் சேவை நிறுத்தப்பட வேண்டியது அல்ல.
பத்திரிக்கை, வானொலி,தொலைக்காட்சி என்ற ஒரு வட்டத்தை விட்டு, வலைப்பதிவு என்ற புதிய தமிழ் வளர்க்கும் ,ஒரு புதிய தலைமுறை வளர, தமிழ் அழியாதிருக்க பாடுபட்ட ஒரு குழுமப் பத்திரிக்கை கூட முன் வராவிட்டால் எப்படி?
வருமா? வரவேண்டுகிறோம் !
ஏனெனில், என்று பதிவுகள் கெளதம் சார்ந்த அந்த வெகுசனப் பத்திரிக்கையில் வெளிவரத்துவங்கியதோ, அப்போதே இப்பதிவுகளின் பார்வையாளர்கள் சில லட்சம் ஆனது உண்மை. அதுதானே எழுதுபவர்தம் விருப்பம்.
இதை நான் பின்னூட்டமாக ஏன் வெளியிடவில்லை என்ற போது, அது நம் வலைப்பூ பின்னூட்ட அரசியலின் அடுத்த அத்தியாயம் ஆகிவிடுமெனச் சொன்னேன்.
புகைப்படத்திற்கு கமெண்ட்டுகள் எனத்துவங்கி, இன்னும் மற்ற படைப்புகளையும் தர உதவ வேண்டுகிறோம்.
ஆகவே, கெளதம்ஜி வெளிவராது போய் விடும், சில நல்ல கருத்துகளும், சிந்தனைகளும் புதைந்து போகாது இருக்க உதவுங்கள்.
எங்களிடையே, விமர்ச்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மையை வளருங்கள்.
ஒரு பத்திரிகையாளாரால் மட்டுமே விமர்ச்சனங்களை சரியாக உணரவைக்க முடியும்.
எனவே, என் போன்றோரின் எண்ணத்தில் குறையில்லை. வார்த்தைகளில் இருந்திருக்கலாம். நான் என் கருத்தை உங்களுக்குப் புரியவைப்பதில் இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலாம்.
என் சக வலைப்பதிவாளர்களே! ஒரு நல்ல துவக்கத்தினை வேரோடு அழிய விடாதிருக்க முயல்வோம்.
கடைசியாக, ரோஜாவுடன் முள் இருந்தாலும், முள்களோடு ரோஜா இருந்தாலும் ரோஜாச் செடி என்று தான் கூறுகிறோம். முள்செடி என்றல்ல.
பின்குறிப்பு: இதற்கு நேர்முனையான பின்னூட்டமிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்களேன் அவருக்கு. ஏதேனும் விட்டுப்போய்ருந்தால் நினைவு படுத்துங்கள். நன்றி.
குறிப்பாக லக்கிலுக்காரின் மன வேதனையடைய, கெளதமின் அறிவிப்புக் காரணாமாயிருந்தது கண்டு வேதனையடைந்தேன். அவர்மீது எந்தக் காழ்ப்புணர்வும் எனக்கு இல்லை. அவர்தம் நல்படைப்புகள் தொடரவும் நல் நட்பு வளரவும் விரும்புகிறேன்.