பட்டறையில் நான்!
என் இனிய வலைப்பதிவு மக்களே!
இது வரை மொக்கைப் பதிவுகளை மட்டுமே அறிந்து வந்திருந்த நான் முதன் முதலில் சில மொக்கை பதிவர்களினைப் பார்த்து வந்திருக்கின்றேன்.
இது வரை தேன்கூட்டோடும், தமிழ்மணத்தோடும் , பின்னூட்டங்களிலும் மட்டுமே ரசித்து வந்த சில நல் உள்ளங்களினை அருகில் ரசித்ததினை உங்களோடு பகிரவந்திருக்கின்றேன்.
கடந்த சில வாரங்களாக மிகச்சிரமமாய் அமைந்து போன வேலைப் பளுவினால் பதிவர் பட்டறையைப் பற்றி வலையில் கூடப் பார்க்கயியலாதிருந்த போது, பொன்ஸ் மற்றும் வீதபீபிள் ஆகியோர் "உங்கள் பங்கு என்ன?" என்று கேட்டவுடன் 2 மணி நேரம் நான் பேசத் தயார் எனக்கூற "உங்கள் ஆக்கத்தினை சிறுகுறிப்பு வரைக!" என்றார்கள். வரைந்தும் தந்து விட்டேன்.
பின்பு நடந்தவற்றினை நகைச்சுவையாக சொல்ல விரும்பவில்லை! அவ்வாறே சிலது நடந்திருந்தாலும்?!
காலையில் வீதபீபிள் உடன் சென்று வளாகத்தில் நுழைந்தேன். கண்ணில் பட்டவை சிலர் மட்டுமே! சரி தான் ! இன்னுமோர் பதிவர் சந்திப்பு தான் இது என்று ஒரு சிரிப்புடன் உள்ளே நுழைய, பல ஆச்சர்யங்களினை தன்னுள் வைத்திருந்த பட்டறை முகப்பு என்னை வரவேற்றது.
முதலில் பட்டவர் அருள். ஒரு வணக்கத்தினை கூறிவிட்டுத் திரும்பினால் நம்ம தல பாலபாரதி ( அவரும் எல்லோரையும் அப்படித்தான் கூப்பிடுகிறார்.) சிரிப்பு நிறைந்த முகத்துடன் வரவேற்றார்.
பின்பு கண்ணில் பட்டவர் மா.சிவக்குமார், பொன்ஸ் போன்றவர்கள்.
"போய் பதிவிட்டுக்கொள்ளுங்க! உங்க பெயரை!" என்றார்கள்.
"பதிவருக்கே பதிவா! "என்று சிரித்தவாறே கிடைத்த அடையாள அட்டையை என் பெயரிட்டு , பதிவு முகவரியிட்டு இதயத்தினருகே இட்டுக்கொண்டேன்.
ஒரு உண்டியலை வைத்து லக்கிலுக்கிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அருகே போனேன்.
"நிதி வசூலிக்க வேண்டும். இதில் என்ன எழுதி வைப்பது ? "என்றதும், சட்டென்று பேனாவை எடுத்து பதிவர் பட்டறை வளர்ச்சி நிதி என்று அழகாய் எழுதினார்.
அருகே உடனே ஒரு உடனடிப் பின்னூட்டம் " சரி தான் ! சரியான ஆளிடம் தான் கேட்டீங்க! " என்று.
இப்படி சிரிப்புடன் தான் ஆரம்பித்தது.
சில நிமிடங்களில் தேனீக்கள் போல் பல தல மற்றும் தலைகள் வர களை கட்ட ஆரம்பித்தது.
இப்படி எழுதினால் நிறைய பேருக்கு தூக்கம்/கோபம்/எரிச்சல் வந்திடும். எனவே, குறிப்புகளாய் சிலவற்றினை மட்டும் வரைய விரும்புகின்றேன்.
எனது முதல் பாராட்டும் வாழ்த்தும் பாலபாரதிக்கும் தான்.
எந்த ஒரு அமைப்பிற்கும் ஒரு அமைப்பாளர் அல்லது செயல்வீரர் வேண்டும்.
ஆயிரம் பேர் கனவு காணாலாம்! நனவு படுத்த முயன்றவருள் முதன்மையாய் அவர் தான் எனக்குக் தோன்றினார். வாழ்த்துகள் தல!!
பின்பு பாரட்ட விரும்புவது 'ஜெயா' என்பவரினைப் பற்றி,
எனக்கெல்லாம் இன்றும் யாரையாவது முதலில் பார்க்கும் போது அதிகப்பட்சம் கைகுலுக்கி புன்னகைக்க மட்டுமே முடியும்!? ஆனால், அவர் 10 வருடங்கள் பழகிய நண்பரினை போல் ஒரு உரிமையுடன் வேலைகளினை பகிர்ந்தும் தன் பொறுப்பிலிட்ட பாங்கும் பின்னர் ஓடி ஓடி அவர் உழைத்த விதமும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த தோழி வளமாய் வாழ மனதில் வாழ்த்தி நகர்ந்தேன்.
வினையூக்கி அவர் பங்கெடுப்பும் அபாரம்.
பின்னர், "நான் கேட்ட தலைப்பில் (அதாவது நான் தந்த தலைப்பில்) எப்போது பேசலாம்!? "என்று பொன்ஸிடம் கேட்டேன்.
"நீங்க எப்படி பதிவை உருவாக்குவது என்று வகுப்பெடுக்க போறீங்க!" என்று அவர் சொன்னார்.
நான் கொடுத்த தலைப்பிற்கும் அதற்கும் துளியும் சம்பந்தமேயில்லை.
முதலில் தலை சுற்றியது. பின்னர் சமாளித்து நான் எடுத்த வகுப்பிற்கு வந்து அமர்ந்த, நின்ற, சன்னலோரம் எட்டிப் பார்த்த நண்பர்களினைப் பார்த்து எனக்கு உற்சாகம் கரைமீறி ஓடியது.
" இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ! விடாதே இவ்வாய்ப்பை !!"என்று உள்ளே ஒன்று கூவியது!
வகுப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் மனநிலையில் இருந்தார்கள். அவர்களினை ஒருமுகப்படுத்த எனக்கு கிடைத்த வழி அவர்களையே பேச வைப்பது என்ற ஆதிகால தொழில் நுட்பம் தான்.
நானே ஒருவரை கூப்பிட்டு " உங்களுக்கு எது பிடிக்குமோ!! அதைப்பற்றி 5 நிமிடம் பேசுங்களேன்! நாங்கள் கேட்கிறோம்?!!" என்றேன். சிலர் சிலையானர்கள்.
ஒரு முதியவர் (வயதான இளையவர்) முன் வந்து "இன்றைய சமூகம்! என் தலைப்பு!!" என்றார்.
சரிதான் ! பேசுங்க ! என்றதும் 10 நிமிடமாயும் பேசிகொண்டிருந்தார். நானும் தடுக்காது பேச விட்டு, பின்னர் " நண்பர்களே! இவர் இப்போது இந்த அறையில் பேசியதை ஒரு இணைய தொழில்நுட்பம் மூலமாய் உலகறியச் செய்வது எப்படி என்பதினை பேசத்தான் நான் வந்துள்ளேன்! என்று சொன்னதும் அனைத்துப் பேச்சுகளும் அடங்கி என்னை நோக்கி அமர்ந்தனர் அனைவரும்.
இருந்தாலும் ஒரு கணித்திரைபின்பிருந்து மட்டும் இருவர் பேசும் சத்தம் கேட்டது.
வழக்கமான ஆசிரியருக்கே உரித்தான கோபத்துடன் " யாருங்க அது! எங்கிட்டயே பேசுங்க! நான் சொல்லித்தரேன்! " என்றேன்.
வகுப்பா!? எனக்கேவா?? என்பது மாதிரி கணித்திரையின் பின்பிருந்து எட்டிப்பார்த்த முகம் பார்த்து அரண்டு போனேன்.
அது நம் "டோண்டு" அவர்கள்.
அவர் வருத்தம் தெரிவிக்க நான் வழிய பின்னர் வகுப்பை துவங்கினேன்.
பின்னர் நல்முறையில் நான் விளக்கியதாக நண்பர்கள் சொன்னார்கள்.
நிறைய பதிய ஆசைதான்! உங்களுக்கும் படிக்க நேரமில்லை என்பதால் விட்டு விடுகின்றேன்.
பின்னர் நடந்த பலவற்றை பலர் பலவாறு ஏற்கனவே பதிந்திருந்தார்கள்.
நான் வியந்தவை பல வருந்தியவை சில.
வருந்தியவற்றுள் முக்கியமானது கீழ்தளத்தில் நட்ந்த போர். அதைப் பற்றி எழுத விரும்பவில்லை.
நண்பர்களே! எத்தனையோ துறைகளில் எத்தனையோ சாதனைகளினை நாம் படைத்தும் நிகழ்த்தியும் கொண்டிருக்கின்ற நாம், ஏன் பதிகிறோம் என்ற கேள்வியைக் கேட்டால், நிச்சயமாக ஒரு 100 பதிலாவது வரும்.
நான் ஏன் பதிகின்றேன் அல்லது பதியத் துவங்கினேன் என்று என்னைக் கேட்டபோது எப்போதும் வந்த பதில் "தமிழ் நீண்டகாலம் வாழ இது ஒரு தலையாய பணி!" என்பதுதான்.
நோக்கம் பலதாய் இருப்பினும் இப்பதிவர் பட்டறையின் ஆழமான விருப்பமும் அதுவாய் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
ஆனால், போகும் பாதையில் வழி மாறலாம்! ஆனால், போய் சேருமிடம் எதுவென்பெதில் தெளிவு வேண்டும்.
நான் விரும்பிய வண்ணம் ஒரு பங்களிப்பு தர எனக்கு உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றியுடனும், யாரேனும் ஒரு நல் பதிவர் என்னால் உருவாகியிருப்பார் என்ற நம்பிக்கையுடனும் முடிக்கின்றேன்.
வாழ்க! வளமுடன்!