"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, October 31, 2006

உறவுகள்-மறந்தும் மரத்தும் போனவை!



யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாகிவிட்டாதாலோ என்னவோ நாம் நம் அருகில் இருந்த பல உறவுகளை இழந்து விட்டோம்.உறவு என்பது ரத்தசம்பந்தமானவற்றையே பெரும்பாலும் குறிக்கின்றது.
நாம் உறவுகளிடமிருந்து என்ன எதிபார்க்கிறோம்? பண உதவியா? ஆதரவு வார்த்தையா? என்னைக்கேட்டால் இரண்டு கேள்விகளுக்குமே ஆம்! என்று தான் பதிலளிப்பேன்.

ஆனால் உறவுகளுக்குள்ளே கொடுக்கல் வாங்கல் கூடாது ? இருந்தால் உறவு கெட்டுவிடுமே! இது பெரும்பாலானர் கருத்து!
நானும் ஆமோதிக்கிறேன்.ஆனால்,கெட்டு விடாமிலிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மிகக்கடினமான நேரத்திலும் உதவிக் கண்டிப்பாகத் தேவை என்ற வேளையிலும் இக்கோட்பாட்டை எப்படிக் கடைப்பிடிப்பது. அப்போது யார் உறவென்றாலும் உதவி கேட்பது தானே மனிதமனம்.நமக்குத் துன்பத்தில் துணைப்புரிய வேண்டுமென ஏங்கித்தவிக்கிறோமே! ஆனால், நாம் அப்படி யாருக்காகவது செய்திருக்கிறோமா ? என்ற கேள்வியைக் கேட்டு விட்டு ஏங்கினால் நன்றாயிருக்குமல்லவா?

எனவே தாம் வள்ளுவத்தில் கடலைவிட,இவ்வுலகை விட பெரிதென எதிர்பாராது செய்த உதவியைக்குறிக்கிறார்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

இதெல்லாம் நடப்பு உறவுகள்.ஆனால்,இந்தத்தலைமுறை இழந்து வரும் நமது மூத்த உறவுகளாகிய நமது தாத்தா பாட்டி போன்றவர்களின்றி எவ்வளவோ இழக்கப்போகிறது.
அன்பு, அரவணைப்பு, நல்ல கருத்துகள்,கதைகள் என எவ்வளவோ நமக்கு கிடைத்தது.ஆனால் வரும் தலைமுறை எதிர்நோக்கியுள்ள இப்போட்டி உலகில் இதற்கெலாம் நேரம் இருக்குமா?? ஒரு வேளை இந்த வலை உலகம் தான் அவர்களுக்கு பிற்கால வாழ்க்கை என்றாகிவிடுமோ!

இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தபோது, தமிழகத்தில் தமிழ் பேசி வாழும் நமக்கே இவ்வளவு வருத்தெமெனில் கடல் கடந்து வாழும் தமிழர் தம் மனம் என்ன பாடுபடுமென் எண்ணியிருந்தபோது கண்ணில்பட்ட ஒரு ஒளி-ஒலி(video)யை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.(இன்னும் நிறைய பிறகு பேசுவோம்.)


 

















இணைப்பிற்கு இங்கே சுட்டவும்.
I found the video on Youtube (via Google).


Monday, October 30, 2006

ஈ.வெ.ரா. வாரிசுகளும் பின்னே கூட்டணியும்!



தலைவர்களைப்பொருத்தவரை சிந்தனை என்பது இப்போதைக்கு கட்சி 
மற்றும் வாரிசு வளர்ச்சிகளிலேயே இருக்கிறது.

பெரியாரின் கடவுள் கோட்பாடுகளை நான் வழிமொழியவோ ?
முன்மொழியவோ இல்லை மேலும் அவரின் பார்ப்பன சூத்திர
வாதங்களைப்பற்றி அத வதங்கள் மற்றும் வாதங்கள் செய்ய நிறைய
சீடர்கள் உள்ளனர் என்பதும் வலையாளர் அறிந்ததே!

ஆனால்,
வன்முறை தூண்டும் பேச்சுகள் ..நீ என் அன்புத்தம்பி என்று கூறி
தம்பிகளை ஆட்டோவில் அனுப்பும கலை மிகுந்த அய்யாக்களும் அம்மாகளும் நிறைந்த இந்நாட்டினிலே ...தனியாய் நின்று யாரைப்பற்றியும் கவலை படமால குரல் கொடுத்த தலைவனாய்- தொண்டனாய் என்னைப் பெரியார் மிகக்கவர்ந்தார்.

கடவுள் பற்றிய அவர் கருத்துகளே இன்னும் இங்கு விற்று முடியவில்லை.
அது போலவே சாதிகளும் இட ஒதுக்கீடுகளும்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் ஒளவை.

குலம் தாழ்த்தி உயர்த்தி செல்லல் பாவம் என்றார் பாரதியார்.

என்றெலாம் நமது தமிழ் சான்றோர் கூறி பல நூற்றாண்டுகளாகிவிட்டது.

ஆனால் இன்னமும் கட்சிகளின் வேட்பாளர் தேர்தலுக்கான இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் மட்டுமே.இதில் அனைத்து முன்னேற்ற கழகங்களும் அடங்கும் (விசயகாந்த் கட்சி உட்பட).

அது சரி ..இவர்களின் வியபார மூலபொருளல்லவா சாதிகள் ..நாம் எப்படி எதிர்பார்க்கலாம் இவர்கள் அதை ஒழித்துக்கட்டுவார்கள் என??



பெரியார் கூறிய பகுத்தறிவு மட்டும் தமிழனுக்கு இருந்திருந்தால கட்சிகளைத்தான் முதலில் அவன் பகுத்தெடுத்திருப்பான் முதலில்.

பாருங்கள் இன்று கூட நாம் சாதிப்பிரச்சனைப் பற்றிய ஒரு தீர்ப்புக்கு காத்திருக்கிறோம்.((http://www.dinamalar.com/2006oct30/court_ind1.asp)





பெரியாரின் சாதி ஏன் ஒழியவில்லை என்ற கருத்து பின்வருமாறு..



சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்;
அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச்
சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது.
எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன்.
இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை
இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை
கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக்
கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும்,
நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.
காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம்
செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை
என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார்.

நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று
நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல்
இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு
சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப்
பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை
ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய
வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும்
என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று
பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம்
வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத்
தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற
வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு
அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து
விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப்
பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த
பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை
ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப்
புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம்
ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது
காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க
விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள்
விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும்
அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை
எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று
இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன்
தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர,
தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு
போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது
ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள்
என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய
ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம்,
"ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால்
கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப்
பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்'
என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும்
கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே
இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.
அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற
முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள்
செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு,
நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே
இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக
"காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச்
சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான்,
"காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி
சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம்.
காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு
மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து
அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி
படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே
என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.
1957)

அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.
யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத்
துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும்
பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு
இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில்
கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு
விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே
இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி,
முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன்,
பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில்
ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று
உறுதியாகக் கூறுவேன்.


27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் ஆற்றிய உரை.
"விடுதலை' 5.5.1953.

(நன்றி:கட்டுரை உதவி:http://www.periyarevr.org)