"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Monday, March 07, 2011

இலவசம்----------(மீள்பதிவு) இது கூட விளம்பரம் தான்.!என்னப்பா! இன்னைக்கும் ராப்பொழுது இப்படித்தானா? என்றான் காரி அருகில் இருந்தவனிடம்.
அவனுக்கு ஒரு மூன்று நாட்களாவது தூங்க வேண்டும் போலிருந்தது. எப்படியும் இன்னமும் ஒரு இரண்டு நாளாவது ஊரே விழாக்கோலமாகத்தான் இருக்கும்.

திருமூல நாயனார் கூத்து நடந்து கொண்டிருந்தது.இடையே சிறுச்சேரி சபையின் சார்பாக நாளை இரவு மயான நடனம் என்ற கூத்து நடைபெறுமென ஒரு சிறு எக்காளமிட, ஒற்றைப்பறை அடித்து அறிவித்தார்கள். மெதுவாய் காரி எழுந்து கூட்டம் விலக்கி ஊருணி நோக்கி நடந்தான்.

தூரத்தில் சந்திரன் மெதுவாய் இறங்கிக்கொண்டிருந்தான். இன்னும் ஒரு யாமத்தில் ஊர் மறுபடியும் சபைக்கூட்டி விருந்தளிக்க வேண்டும்.

அடுத்த நாள் வேளாளக்கூட்டத்தின் விருந்து. நல்ல உணவு வகைகள் இருப்பதாக கூறப்பட்டது.மெதுவாய் குடும்புகளைத்தாண்டி ஊருணி அருகே உள்ள சிறு குளத்தருகே வயிறை சுலபமாக்கி விட்டு தூரத்தில் தெரிந்த மடுவை நோக்கி மெல்ல நடந்தான். அங்கு தான் ஏழு நாட்களாக கள்பானை வைக்கப்பட்டு ,குடிக்கும் அனவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.


பிரமாணக்குடும்பு அருகிலுள்ள சபை என்பதால் பெரும்பாலோனோர் குடிக்காததைப்போல் நடித்து, மூன்றாம் யாமத்தில் தலையில் காய்ந்த பனை ஓலையிட்டு மறைத்து, போகும் போது கோவணத்துடன் சென்றனர். வழக்கம் போல் பிரமாணக்குடித் தலைக்கட்டைச் சார்ந்த இளைஞர் கூட்டம் கூட ஒன்று மெதுவாக வந்து சிரித்து விட்டு ஒரு கள் பானையைத் தனியாக வாங்கிச்சென்றது.


தூரத்தில் ஒரு எக்காளம் கேட்டது. ஒரு துணைத்தளபதி தன் படைகளுடன் சேரிக்குள் வந்தார். கூத்து அப்படியே நின்றது.அங்கிருந்தவர்களும், பெண் வீட்டாரும் வந்து வணங்கி நின்றனர். படை மெதுவாக சபைக்குப்பின்புறம் போய் நின்றது.

'' இங்கு யார் திருமண வீட்டார் " என்றான் துணைத்தளபதி .

மெலிந்த அந்தணர் ஒருவர் முன்வந்து " சொல்லுங்கள்" என்றார் வெற்றிலை வாயில்.

அவரை உற்றுப் பார்த்தபடி " இன்னும் ஒரு நாளோடு வைபவங்களை நிறுத்திக்கொள்ளுங்கள்! திருமாங்கல்யம் ஆயிற்றல்லவா!" என்றார்.

கூட்டத்தில் சலசலப்பு. பெரும்பாலோனர் முணுமுணுத்தனர்.

தொண்டையைக் கனைத்த துணைத்தளபதி " இது நமது மன்னரின் கட்டளை! " என்றவுடன் எல்லோரும் திகைத்து நின்றனர்.

"இங்கு யார் ஊர்த்தலைக்கட்டு "என்றார் துணைதளபதி.

முன்வந்து வணங்கிய அந்த நடுத்தர வயது பிராமணரிடம் " உங்களிடம் நானூறு பேருக்கு தேவையான உணவு தயாரிக்கத்தேவையானை உள்ளனவா" என்றார்.

தலைவர் " உள்ளது ! ஆனால், எவ்விதமானது ! எதற்கு !? "என்றார்.

கூட்டம் அமைதியாயிருந்தது.

"நம் மதிப்புர்க்குரிய ஸ்ரீ ஸ்ரீ இளவரசர் தன் பரிவாரங்களுடனும் உங்கள் சிறுவென்றூர் வர இருக்கிறார் ?!"

எல்லோரும் திகைப்பால் சலசலக்கத் துவங்கினார்கள்.

"ஏதேனும் சிறப்பிருக்கிறதா! இந்த விஜயத்தில்? " எனக்கேட்டார் ஊர்த்தலைவர்.

" மன்னிக்கவும்! எனக்கிடப்பட்ட கட்டளையை உங்களிடம் சொல்லிவிட்டேன். இன்றிலிருந்து மூன்றாவது நாள் முன்பகலில் அவர்கள் வரலாமென செய்தி! " என்றபடி மடியிலிருந்த ஒரு சிறு மூட்டையைத் தலைவரிடம் கொடுத்தான்.

"இதில் ஐநூறு செப்புக்காசுகள் உள்ளன. ஊர்க்கருவூலத்தில் போதுமானவை இருக்குமென்று நினைக்கிறேன்! போதாது எனில், மீண்டும் தரப்படும். நல்ல உணவுகளை தயார் செய்ய ஆயுத்தம் செய்யுங்கள்! மற்ற கட்டளைகளை விடியலில் வர இருக்கும் இளவரசரின் மெய்காவல் படை அறிவிக்கும்" என்றபடி கூட்டத்தைப் பார்த்து "எல்லோரும் நினைவில் கொள்ளுங்கள் இது ஒரு முக்கியமான அறிவிப்பு! உங்கள் வீட்டில் யாராவது அந்நிய விருந்தாளிகள் தங்கியிருந்தால் உடனடியாக நாளை காலைக்குள் வெளியேற்றுங்கள்!

நாளை முதல் இந்த சிறுவென்றூர் வட்டாரம் ஸ்ரீ ஸ்ரீ இளவரசரின் மெய்க்காவல் படையின் கட்டுப்பாட்டிலிருக்கும். இது இரண்டாம் நிலைத்துணைப்படை தளபதி செந்தழலின் உத்தரவு." என்றபடி குதிரையை மடுவின் அருகே உள்ள ஒரு மரத்தில் கட்டிபோட்டார்.


தூரத்திலிருந்த காரி பெருமூச்சுடன் " இனி வேறுவிதமானஆராவாரங்களா?" என்று கையிலிருந்த கள் மொந்தையை ஒரே மூச்சில் குடித்துவிட்டு பாறையில் போட்டுடைத்தான். விரல்களற்ற வலது கையைத் திருப்பிப் பார்த்தபடி நடந்தான். சில வருடங்களுக்கு முன்னர் வரை கைக்கோளப்படையின் முதல்நிலைத்துணைத்தளபதியாயிருந்து இன்று ஆட்டுக்கு செடி வெட்டிப்போடக்கூட யாரையாவது எதிர்பார்க்க வேண்டியுள்ளதினை நினைத்தால் சிரிப்பு தான் வந்தது. போரில்லையெனில் மறவனுக்கு மதிப்பேது. முன்னர் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் தண்டனை போல் ஒரு கை மணிக்கட்டு வரை தகடூரின் கள்வர்போரில் துண்டானது.

2.
அது சற்று விடியல் நேரம்.தூரத்தில் பறவைகளின் மெல்லிய சடசடப்புக்கேட்டது.

"செஞ்சடை! செஞ்சடை!"

சோம்பல் முறித்து எழுந்தான் காரி. யாரோ அவன் பெயரிட்டு அழைப்பதுபோல் இருந்தது.

சட்டென்று துள்ளி அமர்ந்தான். இந்த பெயர் இங்கு யாருக்கும் தெரியாதே!

சற்றே நடுக்கமான குரலில் "யாரது !" என்றபடி வெளியே வந்தான்.

பத்து பதினைந்து பேராக இருந்ததில் நடுவாக இருந்து "நலமா! செஞ்சடை? " எனக்குரல் வந்தது.

சட்டென அடையாளம் தெரிந்தது.அது அருண்மொழி. சோழப்பேரரசின் வருங்காலத் தூண்களில் ஒருவர். பிரதான மந்திரி பிரம்மராயரின் குமாரர். இளவரசின் வலதுகரம்.


திடுக்கிட்டு எழுந்து வாசலிலேயே குனிந்து வணங்கினான். சோழர் படையில் பதவிக்குத்தான் மரியாதை.

"நானும் வணங்குகிறேன்! செஞ்சடை! நீண்ட நாட்கள் ஆகிவிட்டதில்லையா ! சேரதேசத்தில் தானே கடைசியாகச் சந்தித்தோம்?"" ஆம்! அருண்மொழியாரே! அந்தக் கடிகைப்போரில் நீங்கள் இல்லையெனில் அன்றே என் உயிரி போயிருக்கும். மன்னரும் அருமை இளவரசரும் நலம் தானே?"

"அனைவரும் சிவனின் அருளால் நலமே! ஏன் இப்படி வனவாசம் போல் தனிமை வாழ்க்கை!? இரண்டே மாதங்கள் மட்டும் தான் ஓய்வுப்பணமும் பெற வந்தீராமே! ஆய்வுக்கணக்கர் சொன்னார்.?"

அமைதியாய் தூரத்தை வெறித்தான் காரி என்ற செஞ்சடை.

"ஆமாம்! நான் இங்கு இருப்பது உங்களுக்கெப்படித் தெரியும்! இளவரசரின் வருகையறிந்ததும் நான் நேற்று முழுவதும் யார் கண்ணிலும் படாமல் இங்கு தானே இருந்தேன்!"

சத்தமாக சிரித்தான் அருண்மொழி.

" என்ன! செஞ்சடை! மன்னரோ! இளவரசரோ! இல்லை முதன்மைப் பாதுகாப்பிலுள்ள யாரும் போகும் இடம் உடனடியாக அறிவிக்கப்படுவதில்லை என்பது நமது காவல் மரபுகளைச் சார்ந்தது என்பதை மறந்து விட்டாயா!
உன்னைப்பற்றிய சேதிகள் யாவும் பதினைந்துநாட்களுக்கும் முன்னரே நமது ஒற்றர் படை மூலம் வந்தாயிற்று! "
ஆமாம்! இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

" நான் என்னை மறக்க முயன்றுக்கொண்டிருக்கிறேன் அருண்மொழி!"

காரியின் கண்களை உற்றுப் பார்த்தான் அருண்மொழி.

மெதுவாக படைவீரர்களிடம் " நீங்கள் சாலையில் சென்று ஓய்வெடுங்கள்! அடுத்தமுறைக்கு பிரிக்கப்பட்ட வீரர்களை வடக்கே கவனமாயும் குறிப்பாக ஊருணியருகே உள்ள புதர்களில் எச்சரிக்கையுடன் காவலிருக்கச் சொல்லுங்கள் ! நான் சில நாழிகையில் வந்து சந்திக்கிறேனென்று பழுவேட்டையாரிடம் சேதி சொல்லுங்கள்" என்று மேலும் சில உத்தரவுகளைத் தாழ்ந்த குரலில் அறிவித்துவிட்டுத் திரும்பினான் அருண்மொழி.

"என்ன! பழுவேட்டையாரா! அவர் வருமளவுக்கு என்ன? " என்றான் வியப்புடன் செஞ்சடை.

"வியப்பைக் கொஞ்சம் மீதம் வைத்துக்கொள்ளுங்கள் !" என்று கூறி தாழ்ந்தகுரலில் பேசத்துவங்கினான் அருண்மொழி.
***
3.

மெதுவாக கதிரவன் சாயும் அந்த நேரத்தில் ஒற்றை எக்காளாத்துடன் இரு குதிரை வீரர்கள் ஊர் எல்லைக்குள் நுழைந்தனர்.

ஊர் சட்டென பரபரப்பானது.

"ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜ ராஜேந்திரசோழர் வருகிறார்! " என மூன்றாவதாய் வந்த ஒரு ஒற்றை வண்டி அறிவித்தபடி ஊருக்குள் நுழைந்தது.

அதைத்தொடர்ந்து ஒரு சிறு படையும் பின்னர் இளவரசரின் தனிக்காவல் படையும் வர, நடுவே கருமையான ஒரு பெரிய குதிரையில் மெய்க்காவல்படை சூழ கம்பீரமாக இராஜேந்திரர் வந்தார்.

ஊர் மொத்தமும் மெய்சிலிர்த்து "சோழ நாடு வாழ்க! சோழ மாமன்னர் வாழ்க! இளவரசர் வாழ்க! " என்றுக்கூக்குரலிட்டு வாழ்த்தியபடி நெடுஞ்சாலிட்டு வணங்கியது.

கைகளை உயர்த்தி அனைவரையும் வாழ்த்தியும், வணங்கியும் மெதுவாக அங்கு போடப்பட்டிருந்த ஒரு சிறு மேடையில் ஏறி இளவரசர் நின்றவுடன் மெய்க்காவல் படை பிரிந்து மேடையைச் சுற்றி நின்றுக்கொண்டது. அருகேயிருந்த பிரமாணக்குடித்தலைவர் வாழ்த்துப்பாடி இளவரசருக்கு மாலை அணிவித்தார்.

மெதுவாக ஒரு பெரியவர் மெல்லிய குரலில் மன்னரின் மெய்கீர்த்தியைப் பாடத்துவங்க, முதலில் இராஜேந்திரரும் பின்னர் அனைவரும் உரத்த குரலில் பாடத்துவங்கினர். மெய்க்கீர்த்திப் பாடி முடிந்ததும் அனைவரும் " சோழ நாடு வாழ்க ! " என்று ஒரு குரலிட்டு கை உயர்த்தினார்கள். மெதுவாய் அரவம் அடங்கக் காத்திருந்து இளவசரர் பேசத்துவங்கினார்.

" மாமன்னர் வாழ்க! சோழநாடு வாழ்க! அன்பிற்குறிய சிறுவென்றூராரே! இந்த திடீர் விஜயம் உங்களுக்கு மிகவும் வியப்பைத் தரலாம்! உண்மையிலேயே நீங்கள் மறக்கமுடியாத ஒன்றாக மாற்றத்தான் நாங்கள் வந்துள்ளோம்" என்றார்.

எல்லோரும் புரியாமல் நின்றிருந்தனர்.

இளவரசர் மெதுவாக திரும்பிப் பார்க்க , இளவசரின் உதவியாளர் ஒரு சிறு மூட்டையையும், ஒரு ஓலையையும ஊர்த்தலைவரிடம் கொடுத்தான்.

" அந்த ஓலை மன்னர் இட்ட கட்டளை தாங்கியுள்ளது! அதில் உள்ளதை பிறகு உங்கள் தலைவர் படிப்பார்" என்றபடி அருண்மொழியை அருகே அழைத்தார்.

அருண்மொழி அருகே வந்து வணங்கினார்.

"நமது அருண் மொழியை அனைவரும் அறிவீர் என நினைக்கிறேன் ! இவரின் நேரிடைப் பாதுக்காப்பில்தான் வரும் தேர்ந்தெடுத்தல் நடைபெறும்! அதாவது நாளை முதல் இந்த சிறுவென்றூர்வட்டாரத்தை சோழ நாட்டு மாதிரி வட்டாரமாக மாற்றுகிறேன். அதாவது குடவோலை என்ற முறை மாறி உங்கள் தலைமையை நீங்களே தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இனி இந்த முறை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த தலைமைத் தேர்ந்தெடுத்தல் அமையும். தலைவருக்கு கீழ் ஒவ்வொரு சேரியிலிருந்தும் ஒரு உபதலைவரும் ஒரு உறுப்பினருமாக இந்தப் புதிய சபை அமைக்கப்படும். தலைவர் என்பவர் நேரிடையாக மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும், மக்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த உறுப்பினரையும் ,ஏன் தலைவரையும் கூட நீக்க வகை செய்யப்பட்டுள்ளது!

அதாவது, நமது அருமைப்பெரியவர் முக்காலமறிந்த கருவூர்த்தேவரின் வழிகாட்டுதலின் பேரில், நமது மாமன்னரின் தலைமையில், அனைத்து சான்றோர்களையும் உறுப்பினராய்க்கொண்ட ஒரு வழிநடத்தும்குழு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும். இதன் தலையாய வேலை , இந்தக்குழுவிற்கு வரும் புகார்களை மிக ரகசியமாய் ஒற்றைப்படைகொண்டு தீர்மானித்து தண்டனையோ! பதவி நீக்கமோ! தரும்." என்று கூறி கூட்டத்தைப் பார்த்தார்.

அந்தணர்க் கூட்டத்தின் தலைவர் "இதில் பழைய குடவோலை வழிமுறைகள் உள்ளனவா ? இதில் போட்டியிடுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் ? " என்றார்.

இராஜேந்திரர் சிரிப்புடன் "சொல்லுங்களேன் அந்த பழைய வழிமுறைகளை" என்றார்.


அந்த அந்தணர் தொண்டையைக்கனைத்துக்கொண்டு,

"அதாவது வட்டாரங்களுக்கானதலைவர் எனில் அந்த நபர்,

1. குறிப்பிட்ட அளவு அதாவது ஒரு காணிநிலமாவது வைத்திரு வேண்டும்.

2. சொந்த வீட்டில் குடியிருப்பவராகயிருக்க வேண்டும்.

3. முப்பதிலிருந்து அறுபது வயதுக்குட்பட்டவர்கள்.

4. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று நிபுணத்துவம் மிக்கவாராயிருக்கவேண்டுமென்பது முக்கியம்.

5. உடல்வலிமையும் ,உள்ள வலிமையும் உள்ளவர்கள்

6. இதுவரை வாரியத்தலைவராக இருந்திராதவர்

7. அவ்வாறு வாரியம் செய்தவர்களுக்கு உறவினராக அல்லாதவர் என்றெல்லாம் இருக்க வேண்டும்.

இவ்வளவே !! "என்றார் .

"இந்தப் புதிய முறையில் ஒரு சில மாற்றங்கள் தான் வரப்போகிறது . அதாவது நான் முதலில் சொன்னது போல், ஒரு சிறப்பு கண்காணிப்புக்குழு தலைமைகளை வழி நடத்தும். மேலும் வேத நிபுணத்துவம் தேவையில்லை என்றும் நல்ல பண்பாளாராய் இருந்தால் நலம் என்றும் மாற்றியமைக்கப் படுகிறது! "

ஒரு அந்தண இளைஞன் "இது அந்தணருக்கு எதிரான சதி?" என்றான்.

"கைது செய்யுங்கள் அவனை!? " அருண்மொழி கத்தினான்.

"இல்லை! அருண்மொழி ! காலம் காலமாக அனுபவித்து வந்ததல்லவா! ஆகவே தான் இந்தக்கூச்சல் !! விட்டு விடுங்கள்! ஆனால், மறுபடியும் யாரேனும் தேவையில்லாதவை செய்தாலோ? பேசினாலோ! உடனே 40 கசையடிகளுடன் கைது செய்யுங்கள்"

" வரும் முழுநிலவு நாளன்று இந்த தேர்ந்தெடுப்பு நடக்கும்! அதற்கான முழுச்செலவையும் அரசு ஏற்கிறது !அதற்கு தான் அந்த சிறு மூட்டையில்பொற்காசுகள் தரப்பட்டது. உங்களுக்கான மாற்றமிது ! உங்களிடமிருந்து ஒத்துழைப்பை மாமன்னரும், நானும் எதிர்பார்க்கிறோம். அது வரை இப்போதுள்ள தலைவரே பொறுப்பிலிருப்பார். ஆனால், அருண்மொழியின் அனுமதியின்றி அவர் இடும் உத்திரவுகள் செல்லாது ! இப்போதைக்கு இவ்வளவு போதும்! சபை கலையலாம்! வாழ்க ! சோழ நாடு! " எனக்கூறி தன் முத்திரை இலச்சினையை அருண்மொழி கையில் அணிவித்தபடி, குதிரையேறி விடைபெற்றார் இராஜேந்திரர்.

கூட்டம் பெரும் கூக்குரலில் இளவரசரை வாழ்த்தி வழியனுப்பியது.முழு நிலவிற்க்கு முந்தைய நாளிரவு. அனைவரும் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தனர்.

அந்தணக்குடியில் மட்டும் ஒரு சிலர் தவிர அனைவரும் தெற்கு அக்கிரகாரத்தில் தலைவர் வீட்டு அருகேயிருந்த சிறு மடத்தில் குழுமியிருந்தனர்.

"சொல்லுவோய் என்ன உத்தேசம்! மொத்தமாக கிளம்பி மறுபடியும் சேர நாட்டுக்கே போயிடலாமா!" என்றார் தலைவர்.

"அது சரி ஒரு தலைமுறையாச்சு! இப்பெல்லாம் முன்குடும்பி அந்தணர்களுக்குத்தான் அங்கு மதிப்பு. அதுவில்லாமல் சக்தி உபவாசகர்கள் என்று புதுசா ஒரு கும்பல் வேறு கிளம்பிருக்காம்" என்றார் அந்த நடுத்தர வயது அந்தணர். அவருக்கு அடுத்த தலைமை தருவதாய் முடிவாகி ஏற்கனவே நிறைய செலவு செய்திருந்தார்.

"அதீல்லீங்காணும் ! பிரச்சனை என்னன்னா! நம்ம இளவரசர் அவர் சார்பா நிறுத்தியிருக்கிற அந்த காரி தான். அவன் என்னமோ இளவரசர் படைத்தளபதியாய் இருந்தவனாமே"

"தளபதி இல்லைங்காணும் துணைத்தளபதிதான்"

"ஏதோ ஒரு இழவு ! ஒரு வேளாளானயிருந்தாலும் பரவாயில்லை ! நம்மள துச்சமாக மதிக்கிற ஓரு மாமிசப் பட்சிணி எப்படி நம்ம தலைவரா ஏத்துகிறது.
யார் இளவரசருக்கெதிராக ஆளை நிறுத்துவது ? அப்படியே நின்னால் வெற்றிப்பெற்றால் சரி ! தோத்துட்டால் அம்புட்டுத்தான்! அதோடு ஆட்டம் சரி!"

"எங்கிட்ட ஒரு திட்டம் இருக்கிறது" என்றார் புதுத்தலைமைக்கு ஆசைப்படும் அந்தணர்.

சற்று தூரத்தில் அந்த மடத்தின் பின்புறம் ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான்.

****


4.
பெரும்பாலும் யாருமே தூங்காது விடியத் துவங்கிய சமயம். நடக்கின்ற விஷயம் கேள்விப்பட்டு அருகிலிருந்த ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வேடிக்கை பார்க்க வந்திருந்தார்கள். ஆனால், ஒரு சிறப்புப் படை ஊர் எல்லையிலேயே அவர்களை தடுத்து நிறுத்தியிருந்தது.

கருவூரார் தலைமையில் நடந்த ஒரு சிறு யாகம் முடிந்து அனைவருக்கும் பூசைப்பிரசாதம் வழங்கப்பட்டது. மெதுவாக ஊர்மக்கள் ஊர் நடுவேயமைக்கப்பட்டிருந்த அந்தப் புதிய சாவடிகளை நோக்கி நகர்ந்தனர். வழியெங்கும் விழாக்கோலம் போல் ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சேரிக்கும் தனித்தனியே குடிசை அமைக்கப்பட்டு, அங்கு அமர்ந்திருந்த தலையாரியிடம் அனுப்பப்பட்டு அவர்கள் பற்றி விசாரிக்கப்பட்டது. பின்னர், நடுவே பொதுவாய் அமர்ந்திருந்த தடுப்புகள் அமைக்கப்பட்ட சாலையினுள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கையில் ஒரு ஓலையும் தரப்பட்டது. எல்லா ஓலைகளும் ஒரு பொதுவான நிறத்திலிருந்தது. சற்றே நடுவில் இருந்த சிறு மறைப்பின் பின்னர் இரு பெரிய பானைகள் வைக்கப்பட்டு அதில் காரியின் பெயரும் அந்தணர் பெயரும் எழுதப்பட்டிருந்தது. மேலும் ஒரு பானை சிவப்பு மண்ணிலும் , மற்றொன்று கறுப்பு நிறத்திலிமிருந்தது.

ஏற்கனவே! காரிக்கு கருப்பு நிறமும், அந்தணருக்கு சிவப்பு நிறமுமென ஊர் கூடி முடிவெடுத்திருந்தது. ஓலையை குடத்திலிட்டவர்கள் பின் புறமிருந்த வாசல் வழியாக அனுப்பப்பட்டு அங்கிருந்த மைதானம் போன்ற இடத்தில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு இனிப்பு பானமும் கைநிறைய பயறு வகைகளும் வழங்கப்பட்டது. மெதுவாக வெளியேற முயன்ற சிலர் தலை தட்டப்பட்டு தனியாக அமரவைக்கப்பட்டனர்.

உச்சிவரும் வேளை, கருவூரார் சபையைக்கூட்டினார். அருண்மொழி மெதுவாகத் துணைத்தளபதியிடம் கண்ணைக்காட்டினான். ஒரு சிறு படை பிரிந்து சபையைச்சுற்றி நின்றுகொண்டது . மற்றும் ஒருசிறுபடை இரு பானைகள் தூக்கிவந்த வண்டிக்கு காவலாக வந்து, சபை நடுவேயிருந்த மேடையில் வைத்தது.

காரியும் ,அந்தணரும் அழைக்கப்பபட்டு மாலை மரியாதை செய்யப்பட்டார்ககள் . காரி கண்கள் குளமாக அருண்மொழியைப்பார்த்தான். பழுவேட்டாரை பார்த்து கலங்கிப்பின்னர், கருவூராரைப்பார்த்து வணங்கினான்.

சபை ஒரு உற்சாகத்துடனும் கூச்சலுடனும் அமர்ந்திருந்தது.

கருவூரார் கையிலிருந்த அந்த மூடப்பட்ட உருளையைப்பிரித்து , அதில் இருந்த ஓலையைப்பிரித்து கிழக்குப்பார்த்து வணங்கி படித்தார்.

"சிறுவென்றூரைச் சார்ந்த ஐந்து சேரிகளும், இரு பிரமாணகுடும்பைச் சார்ந்த வேளாளக் கூட்டமும் பிரமாண அக்கிரகாரமும் சேர்ந்த இவ்வட்டாரத்தின் தலைமைப் பொறுப்பேற்கும் பதவிக்காக வந்த ஓலைகளின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து நானுற்று இருபத்தி ஆறு "

"அதில் சில ஓலைகள் பானையில் சேர்க்காமல் தரையில் போடப்பட்டிருந்தன. அவை மொத்தம் நூற்றெழுவெதெட்டு. "

"காரி என்றசெஞ்சடை பெற்றவை இரண்டாயிரத்தென்பத்தொன்பது , மீதம் சிவாச்சார்யாரான வேதநாயகத்திற்கு மீதமிருக்கும் ஆயிரத்து நூற்றுச் சொச்சமும் செல்கிறது "

ஆகவே! புதிய தேர்ந்தெடுப்பு வட்டாரக்கொள்கைப்படி நம் காரி என்ற செஞ்சடை தலைமைப்பொறுப்பை ஏற்கிறார்.ஆனால், நேற்று நமது மன்னர் அனுப்பிய வழிகாட்டுதல் குழுவின் மாற்றக் குறிப்பின்படி இரண்டாமிடத்திற்க்கு வருபவர்கள் துணைத் தலைமையாகவும் அறிவிக்கிறோம். அதன் படி நமது வேதநாயகம் துணைத்தலைமை ஏற்கவும் எல்லாம் வல்ல அந்த சிவன் சித்ததில் முடிவாகிறது! " என்று அறிவித்து வானைப் பார்த்து வணங்கினார்.

பெரும்பாலான இளைஞர்கள் கூச்சலுடன் எழுந்து ஆடினர்.

வயதானவர்கள் தோள் துண்டைதூக்கிப்போட்டனர். காரி ஓடிப்போய் கரூவூரார் காலி விழுந்தது வணங்கி பின்னர் அருண்மொழியைக்கட்டிக்கொண்டு அழுதான்.

" எல்லாம் துறந்து எங்கோ கிடந்த எனக்கு எதுக்கு இது! "என்றான்.

"அமைதியாயிரு ! செஞ்சடை! இது இறைவன் சித்தம் ! "என்றார் கருவூரார்.

வேதநாயகம் குழப்பத்துடன் மெதுவாக கூட்டம் பிளந்து வெளியேறினார். ஆனால்,அங்கேயிர்ந்த படைவீரர்கள் அவரை நிறுத்தி மீண்டும் சபை நடுவே நிறுத்தினர். வேதநாயகத்தின் கைகளை கட்டப்பட்டது.

எல்லா அந்தணர்களும் சபை நடுவே செல்ல முற்பட்டு அடக்கப்பட்டனர்.

"ஏன்! ஏன்! "என்று ஆங்காங்கே குரல் எழுந்தது.

அருண்மொழி அனைவரையும் கையமர்த்திவிட்டு பேசத்துவங்கினான்.

நமது ஒற்றர் படை தந்த செய்திப்படி இவ்வந்தணர் செய்த முறைகேட்டிற்க்காக மன்னரின் ஆணைப்படியும் வழிகாட்டுதல் குழுவின் துணைத்தலைவர் என்கிற முறையில் இவரை கைது செய்கிறேன். இவர் மீதுள்ளக் குற்றச்சாட்டு என்னவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ' என்று நிறுத்தினான் அருண்மொழி.

"சொல்! சொல்!" என்று கூட்டம் ஆர்பரித்து கத்தியது.

இப்போது சபைக்கு நடுவே ஒரு பெட்டி கொண்டு வரப்பட்டது. அதோடு சில இளைஞர்களும் கையில் கயிறு கட்டப்பட்டு வந்து நிறுத்தப்பட்டனர்.

"இவர் செய்த குற்றம் வழிகாட்டுதல் குழுவிற்கு ஒரு குழப்பத்தையே தந்துவிட்டன. அதாவது , நேற்று நள்ளிரவு ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஒரு சிறு வாழைப்பழம் வைக்கப்பட்டு அதனருகே ஒரு ஓலையும் வைக்கப்பட்டது. அந்த வாழைப்பழத்தில் மூன்று செப்பு காசுகள் இருந்தன. மேலும், அந்த ஓலை இவருக்கு எங்கள் குழுவால் அளிக்கப்பட்டிருந்த ஓலையை ஒத்திருந்தது. "

"ஆனால், முன்னரே ஒற்றர் படை மூலம் செய்தி வந்ததால் , சில வீட்டிற்க்கு வைக்குமுன்னரே எங்கள் துணைப்படையால் மொத்தமாக கைது செய்யப்பட்டனர்! "

"எனவே, தான் சட்டென்று ஒலை நிறத்தைக் கொண்டு தேர்தெடுத்தல் நிறுத்தப்பட்டு இரு வெவ்வேறு நிறப் பானைகள் வைக்கப்பட்டது. வரும் காலத்தில் இது போன்ற முறைகேடுகளை கவனிக்க ஒரு தனி குழு அமைக்க,நான் வழிகாட்டுதல் குழுவிற்கு சிபாரிசு செய்வேன்!"

"இவர் குற்றவாளி என்றாகி விட்டதால் துணைத் தலைமையின்றி நமது காரி பொறுப்பேற்க்கும் வைபவம் மிக விமர்ச்சையாக நமது இளவரசர் தலைமையில் விரைவில் நடக்கும்! வாழ்க சோழ நாடு! வாழ்க மாமன்னர்!" என்றமர்ந்தான் அருண்மொழி.

சில அந்தணர் தவிர பெரும்பான்மையானவர் வெளியறினர்.

கூட்டம் காரியைத் தலையில் வைத்துக்கொண்டாடியது.

முக்காலம அறிந்த கருவூரார் வேதனையுடன் அந்தணரைப்பார்த்து,

"இது துவக்கம் தான் !? இரண்டாயிரம் ஆண்டானாலும் இது தொடரும் ! ம்..ம்.ம்..ம்..ம் . இலவசம் "என்றார்.

அருகிலிருந்த பழுவேட்டையார் "என்ன அது ! இலவசம்! புதிய வார்த்தையாய் இருக்கிறதே!' என்றார் .

"இலவசம் ! ! இதை நான் இப்போது சொல்லியே ஆக வேண்டியக்கட்டாயத்திலிருக்கிறேன் " என்ற படி மெதுவாக வானம் பார்த்தார்.


*********முடிவ(வு)ற்றது*******


No comments: